உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர்களிடையே திருக்குறளை வளர்க்கும் ஓய்வு பெற்ற அலுவலர்

மாணவர்களிடையே திருக்குறளை வளர்க்கும் ஓய்வு பெற்ற அலுவலர்

கடலுார் செம்மண்டலத்தை சேர்ந்தவர் பாஸ்கரன்,77; ஓய்வு பெற்ற கூட்டுறவு தணிக்கை அலுவலர். உலக திருக்குறள் பேரவையின், கடலுார் மாவட்ட தலைவராக உள்ளார். இவர், உலக திருக்குறள் பேரவை மூலம், 151 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், 18 கல்லுாரிகளிலும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தி, மாணவர்களுக்கு 29,200 திருக்குறள் புத்தகம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கியுள்ளார்.பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் 22 இடங்களின் சுவர்களில் திருக்குறள் வரிகளை எழுதி வைத்துள்ளார். மேலும், 25,000 திருக்குறள் ஸ்டிக்கர்களை பள்ளி மாணவர்களுக்கு விநியோகம் செய்து, வீட்டு கதவுகளில் ஒட்ட ஏற்பாடு செய்துள்ளார். ஆண்டுதோறும் திருவள்ளுவர் தின விழாவில், தமிழ் அறிஞர்களை தேர்வு செய்து விருது வழங்கியுள்ளார். நகரம் மற்றும் கிராம பகுதிகளில் தெருமுனை பிரச்சாரங்கள் மூலம் திருக்குறள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.தேசிய தலைவர்களின் பிறந்த நாள் விழா, சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் தேசிய விழாக்களை நடத்தி மக்களிடையே திருக்குறள் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இல்லந்தோறும் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி நடத்தி, திருக்குறள் வாசிக்கும் வழக்கத்தை உருவாக்கி வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், 'நல்லொழுக்கங்களை கற்பிக்கும் திருக்குறள் இன்றைய காலகட்டத்தில் முக்கியமானது. தமிழ் வளர்ச்சிக்கு திருக்குறள் வழிவகுக்கும். அதனால், திருக்குறள் தொடர்பாக என்னால் முடிந்தவரை பல்வேறு வகையில் மாணவர்கள் மத்தியில், திருக்குறள் பேரவை மூலம் கொண்டு சென்று வருகிறேன். இந்த பணியை தொடர்ந்து செய்வேன்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை