சாலை பணி நிறைவு: பக்தர்கள் மகிழ்ச்சி
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவில் மலைக்கு செல்ல சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை 3ம் தேதி கரிநாள் திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். தினமும் வெளியூர் பக்தர்கள் அதிகளவு வந்து தரிசனம் செய்கின்றனர். மலை மீது கோவில் உள்ளது. மலைக்கு செல்லும் தார்சாலையில் ஜல்லிகள் பெயர்ந்ததால் பக்தர்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. தொடர்ந்து, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 26 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவங்கியது. இப்பணி தற்போது முடிந்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.