சிதம்பரம் வெளிவட்ட சாலை பணி மீண்டும் தெய்வு: 70 சதவீத பணிகள் முடிந்ததால் அதிகாரிகள் தகவல்
சிதம்பரம்: சிதம்பரம் வெளிவட்ட சாலைப்பணி, தொய்வடைந்துள்ளதை, விரைவுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கடந்த தி.மு.க., ஆட்சியில் வெளிவட்ட சாலை, திட்டம் துவங்கியது. சிதம்பரம் நகரின் வடக்கு நுழைவு பகுதியான வண்டிகேட் அருகே, தில்லையம்மன் ஓடையின், இடதுபுற பக்கவாட்டில் துவங்கி 2.8 கி.மீ., துாரம் சென்று, பஸ் நிலையம் மற்றும் அண்ணாமலை நகர் செல்ல சாலை அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டாக நடைபெற்று வருகிறது. அதில், தில்லையம்மன் ஓடையில், ரூ.47 கோடி செலவில் பக்கவாட்டு தடுப்பு சுவர் கட்டி முடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. ஒரு வழியாக சாலை போடும் பணிக்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணி துவங்கியது. அதில், வடிகால் வாய்க்கால் ஓரத்தில் சாலை போடப்படுவதால், பல்வேறு பகுதிகளில் வடிகால்கள் அமைப்பதில் பல்வேறு சவால்களை பணியாளர்கள் எதிர் கொண்டனர். மேலும் சாலை அமைக்கும் பகுதியின் இடையில் பல இடங்களில் மின் கம்பத்தோடு சாலை அமைக்கப்பட்ட புகார் எழுந்ததை தொடர்ந்து படிப்படியாக மின் கம்பங்கள் அகற்றி, சாலைப் பணி விறுவிறுப்பானது. அதே சமயம் வெளிவட்ட சாலையில் துவக்கம் மற்றும் முடிவு பகுதிகளில் பாலப் பணிகள் மற்றும் இணைப்பு சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இம்மாத துவக்கத்தில் மழை பெய்ததால், சாலை பணியில் தொய்வு ஏற்பட்டது. ஆங்காங்கு சிறு சிறு பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வெளிவட்ட சாலைப்பணி 70 சதவீதம் முடிந்துள்ளது. தார்சாலை அமைக்க வேண்டும். தற்போது மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதனால், டிசம்பர் மாத இறுதியில் தார் சாலை பணி துவங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.