சாலையோரம் குப்பை எரிப்பு நெல்லிக்குப்பத்தில் அவலம்
நெல்லிக்குப்பம: நெல்லிக்குப்பம் நகராட்சியில் சேரும் குப்பையை சாலையோரம் எரிப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் சேரும் குப்பைகளை பல ஆண்டுகளாக திருக்குளம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் சேமித்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குப்பை மக்கி உரமானதும் விவசாயிகளுக்கு வழங்கி வந்தனர்.நாளடைவில் பிளாஸ்டிக் பைகள் அதிகமானதால் குப்பை மக்காமல் மலைபோல் குவிந்து வருகிறது. இதனால் சுற்றுசூழல் பாதிப்பதோடு நிலத்தடி நீரும் பாதித்தது. 20 ஆண்டுகளுக்கு முன்பு குப்பையை தரம் பிரித்து உரமாக்கும் திட்டத்துக்காக மேல்பாதியில் இடம் வாங்கப்பட்டது. இங்கு 80 லட்சம் செலவில் சிமெண்ட் களம், தண்ணீர் வசதி செய்தனர். ஆனால், அதிகாரிகள் அலட்சியத்தால் ஒரு நாள் கூட குப்பையில் இருந்து உரம் தயாரிக்கவில்லை. திருக்குளம் பகுதியிலேயே குப்பையை சேமித்து வந்தனர்.அங்குள்ள குப்பையை மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரித்து சுத்தம் செய்து கொள்ள தனியார் நிறுவனத்துக்கு 72 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விட்டனர். அதற்கான பணி நடப்பதால் அங்கு குப்பையை சேமிக்க முடியவில்லை. இதனால் சரவணபுரம் சாலையோரம் குப்பையை மலைபோல் குவித்து வருகின்றனர். நகராட்சி ஊழியர்கள் குப்பையை தீவைத்து எரிக்கின்றனர். சாலை முழுதும் எந்நேரமும் புகைமூட்டமாக இருப்பதால் மாணவ, மாணவிகள் மற்றுமு் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து நகராட்சியில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தினமும் சேரும் குப்பையை அங்கேயே கொட்டுவதால் தொடர்ந்து குப்பை எரிந்து வருகிறது. பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுத்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.