சபா ராஜேந்திரன் அசத்தல்
கடலுார் மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சபா ராஜேந்திரன், அய்யப்பன் ஆகிய 4 பேர் கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். நடக்க உள்ள சட்டசபை தேர்தலிலும் இந்த 4 பேரும், அதே தொகுதிகளில் போட்டியிட தயாராகி வருகின்றனர். இந்நிலையில், நெய்வேலி தொகுதி எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் தேர்தல் பணிகளை படுவேகமாக துவக்கி விட்டார். 'யார் போட்டியிட்டாலும் கவலையில்லை, நெய்வேலி தொகுதியில் வெற்றி பெறுவேன்' என 100 சதவீத நம்பிக்கையுடன் மக்களை சந்திப்பதிலும், தொகுதி வளர்ச்சிப் பணிகளிலும் கூடுதலாக கவனம் செலுத்தி வருகிறார். முதல்வர் ஸ்டாலின் எந்த ஊருக்கு சென்றாலும், டிராக் ஷூட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து, அதிகாலையிலேயே 'வாக்கிங்' செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அப்போது, அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து பேசுகிறார். இதன் மூலமாக மக்களின் கருத்துகளை நேரடியாக கேட்டு அறிந்து கொள்கிறார். முதல்வரின் பாணியில், சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டிராக் ஷூட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து, காலையில் நடைபயிற்சி மேற்கொள்கிறார். நெய்வேலி டவுன்ஷிப் மற்றும் வடக்குத்து ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினமும் காலையிலேயே நடைபயிற்சி செல்வதுடன், தொகுதி மக்களையும், கட்சிக்காரர்களையும் சந்தித்து பேசி, அவர்களின் பிரச்னைகளை கேட்டறிகிறார். தெருக்கள் நல்லமுறையில் உள்ளதா, குடிநீர் சரியாக வருகிறதா, தெருவிளக்கு எரிகிறதா என்பது போன்ற அடிப்படையான வசதிகளை தெரிந்து கொள்கிறார். உடனடியாக அதிகாரிகளை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசி பிரச்னைகளை தீர்த்து வருகிறார். எம்.எல்.ஏ.,வை எளிதாக சந்திக்க முடிவதால் தொகுதி மக்கள் மத்தியில் 'வாக்கிங் பாலிடிக்ஸ்' வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையில், நேற்று முன்தினம் டவுன்ஷிப் வட்டம் 21ல் நடைபயிற்சியின்போது, அருண் என்ற தி.மு.க., தொண்டர், சபா ராஜேந்திரனை சந்தித்து தனது குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டும் என கேட்டு கொண்டார். குழந்தைக்கு 'இன்பத்தமிழன்' என பெயர் சூட்ட கட்சியினர் கைதட்டி ஆராவாரம் செய்தனர். சபா ராஜேந்திரனின் தினசரி 'வாக்கிங்', தொகுதி மக்களிடம் மட்டுமல்லாமல், தி.மு.க.,வினர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.