உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளி மாணவி சாவு: கிராம மக்கள் முற்றுகை

பள்ளி மாணவி சாவு: கிராம மக்கள் முற்றுகை

கடலுார்:கீழ் அழிஞ்சிப்பட்டு பள்ளியில் 2ம் வகுப்பு மாணவி இறந்த சம்பவம் தொடர்பாக பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். கடலுார் மாவட்டம், ரெட்டிச்சாவடி கீழ் அழிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் மகள் பிரியதர்ஷினி, 7; அதேப் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்தார். கடந்த 16ம் தேதி பள்ளிக்கு சென்ற அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. பணியில் இருந்த ஆசிரியை, சிறுமியை வகுப்பறையில் படுக்க வைத்தார். அதைத்தொடர்ந்து மாணவி வாந்தி எடுக்கவே, பெற்றோரிடம் தகவல் தெரிவித்து அனுப்பினார். மாணவி இறந்ததை தொடர்ந்து, ஆசிரியை 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இந்நிலையில், அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 'சிறுமிக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தும் உடனே மருத்துவமனைக்கு ஏன் அழைத்து செல்லவில்லை எனக் கூறி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அய்யப்பன் எம்.எல்.ஏ., மற்றும் போலீசார் சமாதானம் செய்தனர்.கடலுாரில் இருந்து 17 கி.மீ., தொலைவில் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியர், ஒரு பட்டதாரி ஆசிரியர், 2 இடைநிலை ஆசிரியர்கள் என, மொத்தம் 4 ஆசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும். தொலை துாரமாக இருப்பதால் அதிகாரிகள் பார்வை படாத இடமாக உள்ளது. அதனால் ஆசிரியர்கள் முறையாக பள்ளிக்கு வருவதில்லை. தலைமை ஆசிரியை பணியிடம் கடந்த ஒரு ஆண்டாக நிரப்பவில்லை. 4 ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளியில் ஒரு ஆசிரியை மட்டும் எப்படி நிர்வகிக்க முடியும். தலைமை ஆசிரியர் அல்லது சக ஆசிரியர் பணியில் இருந்திருந்தால் இப்படிப்பட்ட சம்பவம் நடந்திருக்காது என, கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ