ஜி.டி.பி.,யில் இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறும் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை நம்பிக்கை
பண்ருட்டி : ''ஜி.டி.பி.,யில், உலக அளவில் இந்தியா 2 ஆண்டுகளில் 3வது இடத்திற்கு உயரும்'' என, இஸ்ரோ ஏவுகணை விஞ்ஞானி சிவதாணுபிள்ளை பேசினார்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு நேற்று முன்தினம் வந்த இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணு பிள்ளை, இரவு நடந்த அர்த்தஜாம பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பின், பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க பேசியதாவது:அப்துல் கலாமுடன் 40 ஆண்டுகள் பணியாற்றினேன். இந்தியாவின் முதல் ராக்கெட் எஸ்.எல்.வி.-3, திட்டமிட்டு செயல்படுத்தினோம். பின் ஏவுகணை தயாரிக்க வேண்டும் என, அப்துல்கலாமுடன் ஹைதராபாத் சென்றேன். அவருடன் புரோகிராம் இயக்குனராக இருந்தேன்.இண்டகிரிட்டேட் கைடு மிசைல் அக்னி, பிருத்வி, ஆகாஷ், நார்த், த்ரிஷ்யூல் ஆகியவை உருவாக்கினோம். அப்போது, உலக நாடுகள் சேர்ந்து எம்.டி., மிசைல் டெக்னாலஜி கண்ட்ரோல் கொண்டு வந்தனர். இந்தியாவிற்கு எவ்வித தொழில்நுட்பம், பொருட்கள் வழங்க மாட்டோம் என அறிவித்தன. நாம் தொழில்நுட்பங்களை தாமதாமாகத்தான் உருவாக்கினோம். இதனால், அமெரிக்காவை விட 40 ஆண்டுகள் விஞ்ஞான தொழில்நுட்பத்தில் பின்தங்கியிருந்தோம். அந்நிலையை மாற்றி, அந்நாடுகளுக்கு இணையாக நாம் செயல்பட வேண்டும் என்பது தான் அப்துல்கலாம் திட்டம். சக்தி நம்மிடம் இருந்தால் இன்னொரு சக்தி நம்மை மதிக்கும் என்பார். தொழில்நுட்பம் மூலம் அக்னி ஏவுகணை 5 ஆயிரம் கி.மீ. செல்லும் சக்தி தற்போது உள்ளது. எல்லா சக்தி இருந்தாலும் நம் நாடு 5வது நாடாக உள்ளது.ஈராக்கில் 1991ல் நடந்த போரில் தாழ்ந்து போகும் ஏவுகணை, ரேடார்கள் உடைக்க குருஷியல் ஏவுகணையை அமெரிக்கா உபயோகித்தது. விமானங்கள் செல்வது போல் சப் சானிக் ஸ்பீடில் செய்தனர். அவர்களை விட இந்தியா முன்னுக்கு வர வேண்டுமெனில் சூப்பர் சானிக் மிசைல் தயார் செய்திட திட்டம் வகுத்தோம். அதற்கு நான் தலைவராக இருந்தேன். ரஷ்யா-இந்தியா இணைந்து பிரம்மபுத்திரா, மாஸ்கோவாவின் நதியின் பெயரை இணைத்து பிரம்மோஸ் என பெயரிட்டு ஒளியை விட 3 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ஏவுகணை தயாரித்தோம். அமெரிக்காவை விட பவர் உள்ள ஏவுகணையை செய்துள்ளோம். இதுவரை அமெரிக்காவால் கூட செய்யமுடியவில்லை. இன்று சீனாவும், அமெரிக்காவும் பயப்படக்கூடியவை பிரம்மோஸ் ஏவுகணை. ஜி.டி.பி.,யில், உலகத்தில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான் என இந்தியா என 5வது இடத்தில் உள்ளோம். தற்போது இந்தியா வளர்ச்சி 6.8 சதவீதத்தில் உள்ளது. அமெரிக்கா 2 சதவீதத்தில் உள்ளது. சீனா 4.8 சதவீதமாக உள்ளது.பொருளாதாரத்தில் நம் முன்னேறி வருகிறோம். இன்னும் இரு ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியில் 3ம் இடத்திற்கு செல்வோம். ஏனெனில் சீனா வளர்ச்சி 4.8 சதவீதமாக குறைந்துள்ளது. நாம் தான் இந்த உலகத்தை ஆளப்போகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.