உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டியில் அரசு கல்லுாரிக்கு இடம் தேர்வு தீவிரம்! தொகுதி மக்களின் விருப்பம் நிறைவேறுமா

பண்ருட்டியில் அரசு கல்லுாரிக்கு இடம் தேர்வு தீவிரம்! தொகுதி மக்களின் விருப்பம் நிறைவேறுமா

பண்ருட்டி: தமிழக முதல்வர் அறிவித்த அரசு கலை அறிவியல் கல்லுாரி அமைக்க பண்ருட்டி தொகுதியில் இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடலுாரில் கடந்த 21ம் தேதி நடந்த அரசு விழாவில் வேல்முருகன் எம்.எல்.ஏ., விடுத்த கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், பண்ருட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்கப்படும் என அறிவித்தார்.அதனையொட்டி, பண்ருட்டி தொகுதியில் அரசு கல்லுாரி அமைக்க 5 ஏக்கர் பரப்பளவு இடத்தை வருவாய் துறை அதிகாரிகள் கடந்த 15 நாட்களாக தேடினர். ஆனால், அரசு புறம்போக்கில் எங்கும் 5 ஏக்கர் அளவிற்கு இடம் இல்லை. ஆனால், திருவதிகையில் பாலுார் சாலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. ஆனால் அறநிலையத்துறை நிலம் அரசுக்கு கொடுப்பதற்கு வாய்ப்பு குறைவு.நெய்வேலி தொகுதியில் பனிக்கன்குப்பம் ஊராட்சியில் ஏற்கனவே அரசு அண்ணா பொறியியல் கல்லுாரிக்கு போக மீதமுள்ள நிலம் சென்னை குடிநீர் வழங்கல் துறையிடம் உள்ளது. பனிக்கன்குப்பம் ஊராட்சியில் பீங்கான் தயாரிக்க பயன்படுத்த களிமண் எடுக்கப்படும் நிலம் உள்ளது. முதல்வர் அறிவித்த அரசு கல்லுாரி அமைக்க தொகுதியில் 5 ஏக்கர் அரசு புறம்போக்கு இடம் இல்லாததால், தனியாரிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்தினால் மட்டுமே, பண்ருட்டி தொகுதியில் அரசு கலை அறிவியல் கல்லுாரி, வரும் கல்வியாண்டில் ஏற்படுத்தப்படும் நிலை உள்ளது. இல்லையெனில் பண்ருட்டி நகரையொட்டி 2 கி.மீ., துாரத்தில் உள்ள நெய்வேலி தொகுதியான பனிக்கன்குப்பத்தில் கல்லுாரி அமைய வாய்ப்புள்ளது. தமிழக முதல்வர் அறிவிப்பின்படி பண்ருட்டி தொகுதியில் கலைக்கல்லுாரி ஏற்படுத்த வேண்டும். நெய்வேலி தொகுதியில் நெய்வேலி டவுன்ஷிப்பில் ஜவகர் இருபாலர் கல்லுாரி, காடாம்புலியூரில் சங்கமம் தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பனிக்கன்குப்பத்தில் அரசு அண்ணா பொறியியல் கல்லுாரியும் உள்ளது.பண்ருட்டி தொகுதியில் தனியார் மகளிர் கல்லுாரி உள்ளது. ஆனால் இருபாலர் கல்லுாரி இல்லாததால் பண்ருட்டி மாணவர்கள் கடலுார், விழுப்புரம் அரசு கல்லுாரி நோக்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. கல்லுாரிக்கு தீவிரமாக இடம் தேடும் அதிகாரிகள் தொகுதி மக்களின் விருப்பபடி பண்ருட்டியில் அரசு கல்லுாரி அமைக்க இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை