உடற்கல்விக்கு தனி பாடத்திட்டம்? அரசு தெளிவுப்படுத்த கோரிக்கை
கடலுார்: தமிழக அரசு பள்ளிகளில் உடற்கல்விக்கு என தனி பாடத்திட்டம் இல்லாத நிலையில், 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடற்கல்வி தேர்வு நடத்தப்படுகிறது. இதனால் உடற்கல்விக்கென தனி பாடத்திட்டம் உருவாக்க வேண்டுமென உடற்கல்வி ஆசிரியர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதையேற்று கடந்த ஆண்டு, சி.பி.எஸ்.இ.,பள்ளிகளைப் போல தமிழக அரசு பள்ளிகளில் உடற்கல்விக்கு தனி பாடத்திட்டம் கொண்டு வரப்போவதாக தகவல் வெளியானது. ஆனால், அரசு தரப்பிலிருந்து அதற்கான முயற்சிகள் எதுவும் இல்லாததால் உடற்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தி யடைந்தனர்.இதுகுறித்து பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஜெயதேவன் கூறுகையில்,'தமிழக அரசு நடப்பாண்டில் தனி பாடத்திட்டம் உருவாக்கி, புத்தகம் கொடுத்து செய்முறை மற்றும் எழுத்து தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்த்த நிலையில், அது குறித்து அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது' என்றார்.