தினமலர் மெகா கோலப்போட்டியால் சில்வர் பீச் விழாக்கோலம்! கடலுாரில் பரிசு மழையில் நனைந்த போட்டியாளர்கள்
கடலுார் : 'தினமலர்' நாளிதழ் சார்பில் கடலுாரில் நடந்த மெகா கோலப் போட்டியில், கடலுார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். இதனால், கடலுார் சில்வர் பீச் விழாக்கோலம் பூண்டது.மார்கழி மாதத்தில் பெண்களின் கோலமிடும் திறமைக்கு மகுடம் சூட்டி மகிழ்விக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ், ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் 'மெகா' கோலப்போட்டி நடத்தி, சிறந்த கோலமிடும் பெண்களுக்கு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தி வருகிறது.இந்தாண்டு, சூப்பர் 'ருசி' பால் நிறுவனத்துடன் இணைந்து, கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் இரண்டாவது முறையாக 'மெகா' கோலப்போட்டியை நேற்று நடத்தியது. பெண்கள் குவிந்தனர்
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள், அதிகாலை முதலே கடலுார் சில்வர் பீச்சில் குவியத் துவங்கினர். காலை 7:00 மணிக்கு போட்டி துவங்கிய நிலையில், பனியையும் பொருட்படுத்தாமல் காலை 5:00 மணி முதலே பெண்கள் அணி அணியாக வந்தனர். நடுவர் குழு திணறல்
புள்ளிக்கோலம், ரங்கோலி, டிசைன் என மூன்று பிரிவுகளில் 'மெகா' கோலப் போட்டி நடத்தப்பட்டது. போட்டியாளர் களுக்கு 4க்கு 4 அடி இடம் ஒதுக்கப்பட்டது. சரியாக 7:00 மணிக்கு துவங்கிய போட்டி, 8:00 மணிக்கு முடிந்தது. ஒரு மணி நேரத்தில், போட்டியாளர்கள் பல்வேறு வண்ணங்களில் கை வண்ணங்களை வெளிப்படுத்தி அசத்தினர். இதனால், கடற்கரை சாலை வண்ணமயமாகவும், கோலாகலமாகவும் காட்சியளித்தன.இப்படியெல்லாம் கோலம் போட முடியுமா என்று வியக்கும் விதத்தில், கோலங்கள் மின்னின. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் செல்வி, கடலுார் நகர்ப்புற குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் தனபாக்கியம், ஓய்வு பெற்ற ஆசிரியை ரமாமணி திருமலை ஆகியோர் அடங்கிய நடுவர் குழுவினர் சிறந்த கோலங்களை தேர்வு செய்தனர்.நுாற்றுக் கணக்கான சிறந்த கோலங்களில் பரிசுக்குரிய சிறந்த கோலங்களை தேர்ந்தெடுப்பதில் நடுவர் குழுவினர் திணறினர். அந்த அளவிற்கு அனைத்து கோலங்களும் சிறப்பாக இருந்தது. இருப்பினும் நடுவர் குழுவினர் இப்பணியை நிதானித்து சிறப்பாக செய்தனர். பரிசு மழையில் போட்டியாளர்கள்
புள்ளி, ரங்கோலி, டிசைன் என 3 பிரிவுகளில், ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த முதல் மூன்று கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக மாநகர மேயர் சுந்தரி ராஜா, அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகர கமிஷனர் அனு, எஸ்.பி., ராஜாராம், ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த கோலமிட்ட பெண்களுக்கு பரிசு வழங்கினர். மேலும், அடுத்தடுத்து இடங்களுக்கான போட்டியில் வென்றவர்களுக்கும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பு விருந்தினர்களும், 'தினமலர்' நாளிதழுடன் கோலப் போட்டியை இணைந்து வழங்கியவர்களும் பரிசு வழங்கினர். பரிசு வென்றவர்கள்
வடலுாரைச் சேர்ந்த இந்திராணி, காராமணிக்குப்பம் மோகனா, பண்ருட்டி கீதா ஆகியோருக்கு முதல் பரிசாக 4 கிராம் தங்கக் காசு பெற்றனர். இரண்டாம் பரிசான வாஷிங் மெஷின் பண்ருட்டியை சேர்ந்த சுதா, பி.முட்லுார் ராஜலட்சுமி, கடலுார் நீலவேணி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசாக பிரட்ஜை, கடலுார் கோண்டூர் ஓம்சக்தி, ஆண்டார்பள்ளிபாளையம் இலக்கியா, நாணமேடு சக்தி ஆகியோர் பெற்றனர்.மேலும், 4ம் பரிசாக 3 பேருக்கு எல்.இ.டி., 'டிவி', 5ம் பரிசாக 3 பேருக்கு சைக்கிள், 6ம் பரிசாக 3 பேருக்கு டேபிள் டாப் கிரைண்டர், 7ம் பரிசாக 15 பேருக்கு டைட்டன் வாட்ச், 8ம் பரிசாக 9 பேருக்கு குக்கர், 9ம் பரிசாக 15 பேருக்கு 15 கிலோ சிப்பம், 10ம் பரிசாக 6 பேருக்கு காஸ் அடுப்பு, 11வது பரிசாக 12 பேருக்கு கோல்டு வின்னர் ஆயில் என, மொத்தம் 75 பேருக்கு பரிசு வழங்கப்பட்டன. கவுரவிப்பு
மெகா கோலப் போட்டி பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள், சிறந்த கோலங்களை தேர்வு செய்த நடுவர்கள் அடங்கிய குழுவினர், இணைந்து வழங்கியவர்களுக்கு 'தினமலர்' நாளிதழ் சார்பில் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். அனைவருக்கும் பரிசு
கோலப் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் 'தினமலர்' நாளிதழ் காலண்டர், 'ருசி' நெய், சேலை, பிளவுஸ் பிட், வளையல், குங்கும சிமிழ், தாலி கயிறு செட், பேஸ் பவுடர், சில்வர் டிபன் பாக்ஸ், பேன்ஸி பொருட்கள் செட், மஞ்சள் துாள், ராம் தங்க மாளிகை காலண்டர், 1 கிலோ பச்சரிசி, ஹமாம் சோப், துணி சோப், வாஷிங் லிக்விட், வாட்டர் பாட்டில், மளிகை பொருட்கள் என மொத்தம் 18 பொருட்கள் அடங்கிய தொகுப்பு பரிசாக வழங்கப்பட்டன. மருத்துவ முகாம்
'தினமலர்' நாளிதழ் சார்பில் நடத்தப்பட்ட மெகா கோலப் போட்டியில் பங்கேற்க 500 பெண்களும், கோலத்தை பார்வையிட 2,000 பொதுமக்களும் திரண்டனர். இதற்காக கடலுார் கோவன் நுரையீரல் சிறப்பு சிகிச்சை மையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கு நுரையீரல், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினர். சில்வர் பீச்சல் நடைபயிற்சி சென்றவர்களும் பரிசோதனை செய்து கொண்டனர். விழாக்கோலம்
கடலுார் சில்வர் பீச்சில் பெண்கள் வரைந்த வண்ணமயமான கோலங்களை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்து ரசித்தனர். கோலமிட்ட பெண்களை பாராட்டியதுடன் சிறந்த கோலங்களை மொபைல் போனில் படம் பிடித்தும், அருகில் நின்று செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். 2,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் கூட்டத்தால் கடலுார் சில்வர் பீச் திருவிழாக் கோலமாக காட்சியளித்தது. பங்கேற்றவர்கள்
மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா, மகா மாரியம்மன் மார்டன் ரைஸ்மில் சார்பில் ரமேஷ், கவுன்சிலர் ஆராமுது உட்பட பலர் பங்கேற்றனர்.