உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிராமங்களில் சிறந்த மாணவர்களை உருவாக்கி சிறுபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி அசத்தல்

கிராமங்களில் சிறந்த மாணவர்களை உருவாக்கி சிறுபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி அசத்தல்

கடலுார் மாவட்டத்தின் கடைக்கோடியில் வேப்பூர் அருகே சிறுபாக்கம் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் கல்வியறிவு பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடையும் நோக்கில், கடந்த 1961ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி சிறுபாக்கம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி துவங்கப்பட்டது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களும் பள்ளியில் சேர்ந்ததை தொடர்ந்து, 1979ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளி துவங்கப்பட்ட 1961 முதல் 2025 வரை 36 தலைமை ஆசிரியர்கள் பணிபுரிந்தனர். தற்போது, தலைமை ஆசிரியராக டேவிட் சுந்தர் ராஜ் பணிபுரிகிறார். 23 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். சிறுபாக்கம் மற்றும் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 444 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் சாரணர் படை, தேசிய பசுமைப்படை, இளம் செஞ்சிலுவை சங்கம், சுற்றுச்சூழல் மன்றம், இலக்கிய மன்றம், வானவில் மன்றம், சிறார் திரைப்பட மன்றம், வினாடி-வினா மன்றம் உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன. இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பெரும்பாலானோர், தற்போது, பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மத்திய மற்றும் மாநில அரசு பணிகளில் பல்வேறு துறைகளில் உயர் பதவி வகித்து வருகின்றனர். கடந்த 2024-25ம் கல்வியாண்டில் நடந்த 10ம் வகுப்பு பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது. இதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர்கள், ஆசிரியர்களை பாராட்டி, சான்றுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு � பெரும்புதுாரில் நடந்த மாநில அளவிலான நாத சங்கமம் போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். ஆண்டுதோறும் நடக்கும் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் வெற்றி பெற்று, தொடர் சாதனை படைக்கின்றனர். கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களின் மீது கலெக்டரின் 'நடுவுல கொஞ்சம் கற்றலை தேடி' திட்டம் மூலமாக தனி கவனம் செலுத்தப்படுகிறது. இங்கு படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்களின் மூலம் கல்வியறிவு, சமூக அறிவு, தனி மனித ஒழுக்கம், சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் உள்ளிட்டவை கற்றுக் கொண்டு சிறந்த மாணவர்களாக உருவாகி வருகின்றனர்.

அடிப்படை வசதிகள் இல்லை

பள்ளியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மாணவர்களுக்கு போதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வுக் கூடங்கள் இல்லாததால் கல்வி பாதிக்கப்படும் சூழல் உள்ளது. விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் மாணவர்கள், பயிற்சியில் ஈடுபட மைதானம், விளையாட்டு உபகரணங்கள் இல்லை. இதனால், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முழு அர்ப்பணிப்பு

நான் நடப்பு கல்வியாண்டில் புதிய தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றேன். பள்ளியின் முன்னாள் மாணவர்கள் படைத்த சாதனைகளை நினைத்து வியப்படைகிறேன். அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு மாணவர்களை மேம்படுத்துவதில் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன். -டேவிட் சுந்தர் ராஜ், தலைமை ஆசிரியர்.

தொழில் வளர்ச்சிக்கு உதவியது

கடந்த 1977ம் ஆண்டில் 6ம் வகுப்பு பயின்ற போது தலைமை ஆசிரியர்களாக வடிவேல், மாசிலாமணி பணிபுரிந்தனர். இவர்கள், பள்ளியை முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்றனர். பள்ளிக்கு 1 நிமிடம் தாமதமாக சென்றால் கூட மாணவர்களுக்கு தண்டனை வழங்குவர். ஆசிரியர்கள் கண்டிப்புடன் இருந்ததால், தற்போது வரை உரிய நேரத்தில் எனது தொழிலை கவனிக்கும் பழக்கம் ஏற்பட்டது. விடா முயற்சியுடன் வியாபாரம் செய்து தொழிலதிபராக முன்னேறி உள்ளேன். -செல்வராசு, தொழிலதிபர்.

வங்கி அதிகாரியாக பணி

கடந்த காலங்களில் உயர்நிலைப் பள்ளிக்கு சென்று படிக்க 35 கி.மீ., துாரமுள்ள சின்னசேலம் செல்ல வேண்டும். அதிக போக்குவரத்து வசதி இல்லாததால், ஆசிரியர்களே பள்ளிக்கு சைக்கிளில் வரும் சூழல் இருந்தது. எனக்கு கிடைத்த நல்வாய்ப்பாக சிறுபாக்கத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி துவங்கப்பட்டது. இங்கு பள்ளி முடிப்பை முடித்தேன். பின், பட்டப்படிப்பு முடித்து, எஸ்.பி.ஐ., அதிகாரியாக பணிபுரிந்தேன். இதற்கு இங்கு கற்ற அடிப்படை கல்வியே காரணமாகும். பணி ஓய்வுக்கு பின், சிறுபாக்கம் ஊராட்சி தலைவர் பதவி வகித்தேன். கடந்த 2017ம் ஆண்டு மத்திய அரசு சார்பில் மாநில அளவில் சிறந்த ஊராட்சி தலைவர் விருது பெற்றேன். -வேலாயுதம், முன்னாள் ஊராட்சி தலைவர்.

பள்ளியில் படித்தது பெருமை

நான் இப்பள்ளியில் படித்தபோது கட்டுப்பாட்டுடன் பள்ளி இயங்கியது. கல்வியுடன், நல்லொழுக்கம், சமூக நடவடிக்கைகளையும் ஆசிரியர்கள் கற்று கொடுத்தனர். ஊராட்சி துணைத் தலைவராக பதவி வகித்தேன். இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் பல துறைகளில் சாதனை படைக்கின்றனர். இங்கு, படித்ததை பெருமையாக கருதுகிறேன். -மனோகரன், முன்னாள் மாணவர்.

அரசியல் வாழ்விற்கு அடித்தளம்

நான், கடந்த 1993ம் ஆண்டில் இப்பள்ளியில் படித்த போது, மாணவர்களிடம் ஆசிரியர்கள் கண்டிப்புடன் இருந்தனர். படிப்பில் கவனம் செலுத்தாத மாணவர்கள் தனி கவனம் செலுத்துவர். இங்கு, கற்றுக் கொண்ட ஒழுக்கம், எனது அரசியல் வாழ்விற்கு அடித்தளமிட்டது. மக்கள் பிரதிநிதியாக தேர்வாகி பல சேவைகளை செய்தேன். இதற்கு, இப்பள்ளி ஆசிரியர்களே காரணம். -சம்பத்குமார், ம.தி.மு.க., ஒன்றிய செயலர், மங்களூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி