சொர்ணாவூர் தடுப்பணை உடைந்தது தமிழகம் - புதுச்சேரி விவசாயிகள் கவலை
நெல்லிக்குப்பம்: கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த சின்ன பகண்டை கிராமம், பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ளது. ஆற்றின் வடக்கு கரையில் விழுப்புரம் மாவட்டம், சொர்ணாவூர் தடுப்பணை உள்ளது. இந்த இரண்டு பகுதிகளையும் சுற்றியுள்ள விவசாயிகள் பயனடையும் வகையில், தமிழகம் புதுச்சேரி அரசுகள் ஒப்பந்தபடி, 1972ம் ஆண்டு ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணையில் தண்ணீர் திறக்கும் போது, இரு மாநில ஒப்பந்தப்படி, சொர்ணாவூர் தடுப்பணையில் இருந்து மதகுகள் வழியாக புதுச்சேரி மாநிலம், பாகூர் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படும். ரூ.32 கோடி
அங்கிருந்து புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 28 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும். இந்த ஏரிகளின் தண்ணீர் வாயிலாக புதுச்சேரியில் 4,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரிகள் நிரம்பிய பின்னர் மதகுகளை மூடினால், தமிழக பகுதி ஆற்றில் தண்ணீர் ஓடி கடலில் கலக்கும். இந்த தடுப்பணையால் நேரடியாக புதுச்சேரி மாநில விவசாயிகள் பயன்பெற்றனர். மேலும், சொர்ணாவூர் தடுப்பணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரால், சுற்றியுள்ள விவசாய நிலங்களில் நிலத்தடிநீர் உயர்ந்து விவசாயத்துக்கு பயனுள்ளதாக இருந்தது.இங்கிருந்து தமிழக பகுதியில் 8 ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல வசதி இருந்தும், அந்த வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் பயனில்லாமல் ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. தடுப்பணை பலம் இழந்து காணப்பட்டது. இதை பலப்படுத்த தமிழக அரசு, 32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி ஆறு மாத மாக பணி நடந்து வந்தது. ஆற்றின் இருபுறமும் மதகுகள் அமைத்து, தடுப்பணையை பலப்படுத்தும் பணி முடியும் நிலையில் இருந்தது. தடுப்பணை நடுப்பகுதியில் பணி நடக்கவில்லை. 200 அடி நீளம்
இந்நிலையில், 10 நாட்களுக்கு முன் பெண்ணையாற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் தடுப்பணையின் நடுப்பகுதி 200 அடி நீளத்துக்கு உடைந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் ஆற்றில் வரும் தண்ணீரை தேக்கி வைக்க வழியின்றி, முழுதும் கடலுக்கு செல்கிறது.தடுப்பணை உடைந்ததால், அதை சரி செய்யும் வரை புதுச்சேரி மாநில ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் நலன்கருதி, உடைந்த தடுப்பணையை உடனடியாக சீரமைக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.