உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பசுமை திட்டத்தில் காடுகள் பரப்பளவை அதிகரிக்க... நடவடிக்கை; மாவட்டத்தில் 54.25 லட்சம் மரக்கன்றுகள் நடவு

பசுமை திட்டத்தில் காடுகள் பரப்பளவை அதிகரிக்க... நடவடிக்கை; மாவட்டத்தில் 54.25 லட்சம் மரக்கன்றுகள் நடவு

கடலுார், ஆக. 18- கடலுார் மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு திட்டத்தில் காடுகளை அதிகரிக்க54.25 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் காடு வளர்ப்பு மற்றும் பசுமை மீட்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சகம் பல்வேறு திட்டங்கள் மற்றும் திட்டமிடல்களின் மூலம் ஆதரவு வழங்குகிறது. அதன்படி, கடந்த 2021-22ம் ஆண்டில் பசுமை தமிழ்நாடு திட்டம் துவங்கப்பட்டது. இதன் நோக்கம் 10 ஆண்டுகளில் மாநிலத்தின் பசுமை மற்றும் காடு பரப்பளவை 23.71 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக அதிகரிப்பதாகும். இதுகுறித்து எம்.பி., விஷ்ணுபிரசாத் லோக்சபாவில் கேட்ட கேள்விக்கு, கால நிலை மாற்ற அமைச்சகம் அளித்த பதில் பின்வருமாறு: கடந்த 2022-23ம் ஆண்டு முதல் 2024-25ம் ஆண்டு வரை தமிழ்நாடு காடு, பிற துறைகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் பொது மக்கள் இணைந்து மாநிலம் முழுவதும் 10.86 கோடி மரக்கன்றுகள் நடவு செய்துள்ளன. இதில், கடலுார் மாவட்டத்தில் மட்டும் 54.25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 2022-23ம் ஆண்டில் நபார்டு திட்டத்தின் கீழ் கிள்ளை மற்றும் பிச்சாவரம் காப்புக் காடுகளில் 20 எக்டர் மாங்குரோவ் மரக்கன்றுகள் நடப்பட்டன. 2023-24ல் பசுமை தமிழ்நாடு திட்ட பயோ ஷீல்டு (வரிசையாக செடிகளை நடுதல்) முயற்சியின் கீழ் கிள்ளை காப்புக் காடுகளில் 100 எக்டர் பாதிக்கப்பட்ட மாங்குரோவ் பகுதிகள் மீட்கப்பட்டன. குடிகாடு மற்றும் கிள்ளை காப்புக் காடுகளில் 4,200 தில்லை செடிகள் நடப்பட்டுள்ளன. தமிழ்நாடு வனத்துறை, பொதுமக்கள் பங்களிப்புடன் மாங்குரோவ் காடுகள் பரப்பளவை அதிகரித்துள்ளது. 2022-23 முதல் 2025 வரை நபார்டு, பசுமை தமிழ்நாடு திட்டம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டத்தின் கீழ் 95 எக்டர் புதிய மாங்குரோவ் மரக்கன்றுகள் நடப்பட்டன. உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு கடலோர மீட்பு திட்டம் துவங்கப்பட்டது. இதில், 160 எக்டர் பாதிக்கப்பட்ட மாங்குரோவ் பகுதிகள் கிராம மாங்குரோவ் குழுக்கள் மூலம் மீட்கப்படும். மேலும் 4 கோடி ரூபாய் மதிப்பில் கடலுார் மாவட்டத்தில் கடல் மட்ட உயர்வு மற்றும் கடலரிப்பை தடுக்கும் 'பயோ ஷீல்டு உருவாக்கம்' என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது. கடலுார் மாவட்டத்தில் காடுகளின் பரப்பளவு 385.48 சதுர கி.மீ., உயர்ந்துள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை