உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தடுப்பணையில் மூழ்கி மாணவர் சாவு

தடுப்பணையில் மூழ்கி மாணவர் சாவு

விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே நண்பர்களுடன் தடுப்பணையில் குளித்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த ரெட்டிகுப்பம் மணிகண்டன் மகன் ஆதிநாராயணன், 12. தந்தை வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், எருமனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஆதிநாராயணன் 8ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று அரையாண்டு தேர்வு முடிந்து, நண்பர்கள் இருவருடன் பரவளூர் தடுப்பணையில் குளித்தார்.தண்ணீரில் மூழ்கிய ஆதிநாராயணன் வெகுநேரமாகியும் வெளியே வராததால், நண்பர்கள் சப்தம் கேட்டு அருகில் இருந்த நபர்கள் ஆற்றில் இறங்கி தேடினர்.தடுப்பணை அருகே ஆழமான பகுதியில் ஆதிநாராயணன் சடலம் மீட்கப்பட்டது. விருத்தாசலம் போலீசார் மாணவர் உடலை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

எஸ்.பி., அட்வைஸ்

இது தொடர்பாக எஸ்.பி., ஜெயக்குமார் விடுத்துள்ள அறிக்கையில், 'பருவ மழையினால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. விடுமுறை நாட்களில் சிறுவர்கள் நீர்நிலைகளில் இறங்கி விளையாடும் போது விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, பொது மக்கள் நீர்நிலைகளில் இறங்கி குளிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தற்போது தொடர் விடுமுறை காலம் வருவதால், சிறுவர்கள் நீர்நிலைகளில் குளிப்பதை பெற்றோர் கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது' என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !