சாலை பணி திடீர் நிறுத்தம்; பொதுமக்கள் மறியல் முயற்சி
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பத்தில் சாலை பணியை நகராட்சி நிர்வாகம் நிறுத்தியதை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 5 வது வார்டு அங்காளம்மன் கோவில் தெருவில் மண் சாலையை சிமென்ட் சாலையாக போடும் பணி கடந்த வாரம் துவங்கியது. சாலை போடும் இடம் கோவிலுக்கு சொந்தமான இடம் என கூறி, கோவில் நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சியிலும் போலீசிலும் புகார் அளித்தனர்.சாலை போடும் இடத்தை பார்வையிட்ட நகராட்சி பொறியாளர் வெங்கடாஜலம், பணியை நிறுத்த உத்தரவிட்டார்.நகராட்சியின் நடவடிக்கையை கண்டித்து, கவுன்சிலர் சரவணன், முன்னாள் கவுன்சிலர் தமிழ்மாறன், பாபு, சுமன், பன்னீர் உட்பட ஏராளமான மக்கள் நேற்று சாலை மறியல் செய்ய முயன்றனர். அவர்களிடம் கமிஷனர் கிருஷ்ணராஜன், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக கூறியதை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.