உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தீபாவளியையொட்டி டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை ரூ.16 கோடி! கடந்த ஆண்டை கூடுதலாக ரூ.1 கோடி அதிகரிப்பு

தீபாவளியையொட்டி டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை ரூ.16 கோடி! கடந்த ஆண்டை கூடுதலாக ரூ.1 கோடி அதிகரிப்பு

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையொட்டி அரசு டாஸ்மாக் கடைகளில் இந்த ஆண்டு 16.79 கோடி ரூபாய்க்கு மேல் மதுபாட்டில்கள் விற்பனையானது. தமிழக அரசுக்கு வருவாய் தரக் கூடிய துறைகளில் அரசு டாஸ்மாக் கடைகள் தான் முக்கிய இடத்தை வகிக்கிறது. கடந்த 2003ம் ஆண்டு முதல் அரசே நேரடியாக மதுக்கடைகள் நடத்தி வருகிறது. நமது நாட்டில் உள்ள மாநிலங்களிலேயே மது விற்பனை மூலம் வருவாய் ஈட்டுவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடலுார் மாவட்டத்தில் ஏற்கனவே 147 கடைகள் செயல்பட்டு வந்தன. பொது மக்களின் எதிர்ப்பு, சாலையோரம் மதுக்கடைகள் போன்றவற்றால் தற்போது 135 டாஸ்மாக் கடைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. கடைகள் எண்ணிக்கை குறைந்தாலும் விற்பனை பெரிய அளவில் குறையாமல் அதே நிலையில் நீடித்து வருகிறது. ஒரு கடையை அப்புறப்படுத்தினால் அந்த கடையின் வியாபாரம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் அதிகரிக்கிறது. கடலுார் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 1.50 கோடி ரூபாய்க்கு குறையாமல் விற்பனை நடந்து வருகிறது. மதுபாட்டில்கள் விற்பனை தீபாவளி பண்டிகை, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட பல பண்டிகைகளில் அதிகளவு மது விற்பனை நடந்து வருவது வழக்கம். இதில் தீபாவளி பண்டிகையின்போதுதான் தான் அதிகளவு மது விற்பனை நடக்கும். அதற்கேற்றாற்போல் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது அதிகளவு பாதிக்கிற அளவு கனமழை இல்லை. அதனால் அனைத்து கடைகளிலும் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. நடப்பு ஆண்டில் 19ம் தேதி (பண்டிகைக்கு முதல்நாள்) 8 கோடியே 67 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. மறுநாள் 20ம் தேதி தீபாவளி பண்டிகையன்று 8 கோடியே 11 லட்சத்து 14ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இவ்விரு நாட்களிலும் சேர்த்து 16 கோடியே 79 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் அளவில் விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு டாஸ்மாக் கடை விற்பனை 15.65 கோடி ரூபாயாகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய் அதிகம் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டு கடலுார் மாவட்டத்தில் கஞ்சா, மெத்தபெட்டமைன், பிரவுன்சுகர், போதை மாத்திரைகள் போன்ற பொருட்களை எஸ்.பி., ஜெயக்குமார் நேரடியாக கவனம் செலுத்தி கட்டுக்குள் கொண்டுவந்தார். மேலும் செக்போஸ்ட்டில் நேரடியாக களத்தில் இறங்கி புதுச்சேரியில் இருந்து மது கடத்தலை கட் டுப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை