இ.சி.ஆரில் நள்ளிரவு பயணங்களில் தேநீர் வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
க டலுாரில் இருந்து சென்னை 180 கி.மீ., துாரம் உள்ளது. திண்டிவனம் புறவழிச்சாலையில் செங்கல்பட்டு அருகே பாலம் கட்டப்படுவதால் அதிகளவு வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலையில் திருப்பி விடப்படுகிறது. மேலும், கிழக்கு கடற்கரை சாலையில் ஒரே டோல்கேட் இருப்பதால் செலவும் மிச்சமாகிறது. அதனால் இ.சி.ஆர்., வழியாக அதிகளவு போக்குவரத்து செல்கிற து. இங்கு, தற்போது சாலை போடும் பணி தீவிரமடைந்துள்ளது. இருவழி சாலையாக இருந்தாலும் மாற்றுப்பாதையில் செல்லும்போது ஆங்காங்கே ஒரு வழிப்பாதையில் தான் செல்ல வேண்டும். இரவு நேரங்களில் சென்னையில் புறப்பட்டு தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் நள்ளிரவு துாக்கத்தை போக்க எங்கும் தேநீர் கடை வைக்க போலீசார் அனுமதியளிக்கவில்லை என, வாகன ஓட்டிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதிய சாலைக்காக நிலம் கையப்படுத்தியதால் சாலையோரங்களில் மக்கள் வசிக்கும் இடங்களாக இல்லை. எங்கும் மின் விளக்கு வசதி கூட இல்லை. இதனால் தொடர்ந்து வாகனம் ஓட்டும் டிரைவர்கள் இளைப்பாற முடியாததால் விபத்துக்களில் சிக்கும் நிலை உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு கடலுாரில் எஸ்.பி.,யாக பதவி வகித்த சரவணன், வாகன விபத்துக்களை குறைக்க தேசிய நெடுஞ்சாலையில் போலீசாரையே தேநீர் கொடுக்க உத்தரவிட்டார். குறிப்பாக, ராமநத்தம் உள்ளிட்ட இடங்களில் வாகன ஓட்டிகளுக்கு நள்ளிரவு நேரங்களில் போலீசார் சார்பில் தேநீர் வழங்கப்பட்டது. அதே போன்று தற்போதைய எஸ்.பி., ஜெயக்குமாரும் வாகன விபத்துக்களை குறைக்க மாவட்டத்தில் இ.சி.ஆர்., சாலை வழியாக நள்ளிரவு நேரத்தில் தேநீர் கடை வைக்க அனுமதிக்கலாம் அல்லது தேநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.