கள்ளிப்பாடி - காவனுார் இடையே தற்காலிக சாலை துண்டிப்பு
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே வெள்ளாற்றில் அதிக அளவு தண்ணீர் வருவதால் கள்ளிப்பாடி- காவனுார் தற்காலிக சாலை துண்டிக்கப்பட்டு, மக்கள் பாதிக்கப்பட்டனர்.ஸ்ரீமுஷ்ணம் அருகே வெள்ளாற்றின் குறுக்கே கள்ளிப்பாடியில் இருந்து காவனுார் இடையே பாலம் கட்டுமான பணி நடக்கிறது.அதற்காக, 10 கிராமங்கள் பயன்பெறும் வரையில் தற்காலிக சாலை போடப்பட்டிருந்தது.கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர். நேற்று மதியம் வரை கள்ளிப்பாடி வெள்ளாற்றில் குறைந்த அளவு மட்டுமே தண்ணீர் வந்த பொதுமக்கள் சாலையை பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பொலாந்துறை அணைக்கட்டில் இருந்து 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெள்ளாற்றில் திறந்து விடப்பட்டது.இதனால் நேற்று மதியத்திற்கு மேல் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்தது.இதனால் தற்காலிக சாலை துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். காவனுார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஸ்ரீமுஷ்ணத்திற்கு வர கருவேப்பிலங்குறிச்சி சென்று 27 கி.மீ. சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.