வீடு ஒப்படைக்கக்கோரி மக்கள் திரண்டதால் பரபரப்பு
கடலுார்; கடலுாரில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஹவுசிங் போர்ட்டில் வீடு ஒப்படைக்கக்கோரி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை பகுதியை சேர்ந்த 17 குடும்பத்தினர், குண்டு சாலை ஹவுசிங் போர்டில் புதியதாக குடியிருப்பு கட்டும் இடத்தில் திரண்டனர். தகவலறிந்த கடலுார் புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.அப்போது, நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக வீடுகள் காலி செய்யப்பட்ட எங்களுக்கு ஹவுசிங் போர்ட்டில் வீடு ஒதுக்கியுள்ளனர். இதற்காக நாங்கள் தனியார் வங்கியில் கடன் பெற்று எங்கள் பங்கு தொகையை அரசிற்கு செலுத்தியுள்ளோம். தற்போது எங்களுக்கு வீடுகளை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், ஹவுசிங் போர்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டால் சரியான பதில் இல்லை. வீடு வாங்காமல் அதற்காக வாங்கிய கடனுக்கு மாத தவணை மற்றும் வட்டி, வாடகை வீட்டிற்கு வாடகை தொகை கட்டி அவதிப்படுவதாக கூறினர்.கோரிக்கை தொடர்பாக கலெக்டரை சந்தித்து மனு கொடுக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதை தொடர்ந்து, பொதுமக்கள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறியதால், கலைந்து சென்றனர்.