ஏலம் போனது ரூ. 7.5 லட்சம் பட்டுவாடாவோ ரூ. 40 லட்சம்
க டலுார் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஹரி ஏரி உள்ளது. அந்த ஏரியில் 800 ஏக்கர் பரப்பில் கருவேல காடு உள்ளது. செழிப்பாக வளர்ந்துள்ள இந்த கருவேல மரங்களை ஏலம் விட பொதுப்பணித்துறை முடிவு செய்தது. சில கோடி மதிப்புள்ள இந்த மரங்களை, ஏலம் எடுக்க ஆளும் கட்சி மற்றும் பிற கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் அருகாமை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆளும் கட்சி பிரமுகர் களத்தில் இறங்கினார். உள்ளூர் ஆளும் கட்சி, பிற கட்சி பிரமுகர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு தாராளமாக ரூ. 4௦ லட்சத்தை வாரி வழங்கினார். இதனால் நேற்றைய ஏலம் அதே கிராமத்தில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சுமூகமாக நடந்தது. இந்த ஏலத்தில் 7.5 லட்சம் ரூபாய்க்கு உள்ளூர் பிரமுகர் பெயரிலே ஏலம் எடுக்கப்பட்டது. இதற்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.,யாக ரூ. 1.35 லட்சமும் செலுத்தினார். இதை பார்த்த உள்ளூர் பிரமுகர் ஒருவர், ரூ,. 7.5 லட்சம் மதிப்பு ஏலத்திற்கு ரூ. 4௦ லட்சம் பட்டுவாடாவா என வாயை பிளந்து அங்காலாய்த்து கொண்டார்.
2 கோடி மதிப்பு மரங்கள்
கருவேல மரங்களை அகற்றும்போது, நன்கு வளர்ந்த மரங்கள் நல்ல விலைக்கு விற்பனையாகும். அதுபோல சிறிய மரங்கள் விறகு, கரி தயாரிக்க விற்பனை செய்யப்படும். 800 ஏக்கர் பரப்பிலான கருவேல மரங்கள் ரூ. 2 கோடி வரை விற்பனை செய்ய முடியும். முறையாக ஏலம் விட்டு இருந்தால் அரசுக்கு ஒரு கோடி முதல் ரூ. 1.5 கோடி வரை லாபம் கிடைத்திருக்கும். ஆளும் கட்சி பிரமுகரின் தலையீட்டால் சொற்ப தொகைக்கு ஏலம் விடப்பட்டு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், ஊராட்சி அலுவலகத்தில், செயலாளர் முன்னிலையில் ஏலம் விடுவதிற்கு பதில் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் நடந்தது முறைகேடு என புகார் தெரிவித்து வருகின்றனர்.