மாவட்டத்தில் 15,751 மெட்ரிக் டன் உரம் இருப்பு உள்ளது; விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்படுத்தும் 15 ஆயிரத்து 751 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு உள்ளது என கலெக்டர் கூறினார். கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகளுக்கான குறைகேட்பு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தேவையான இடங்களில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது. விவசாயிகளுக்கு பண்ணைக் குட்டைகளை அமைக்க நடவடிக்கை எடுப்பது. விவசாயிகளுக்கு சம்பா நெல் பருவத்திற்கான பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். மின் மோட்டார் வாங்குவதற்கான உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் மானிய தொகை விரைவில் வழங்க வேண்டும். விவசாய பொருட்களை எடுத்துச் செல்வதற்கான சாலைகளை சீரமைத்தல், ஏரிகளில் வண்டல் மண் எடுத்திட அனுமதி வழங்குதல், கால்நடை மருத்துவமனை ஏற்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர். தொடர்ந்து, கலெக்டர் பேசியதாவது: மாவட்டத்தில் தற்போது யூரியா 3,632 மெட்ரிக் டன், டி.ஏ.பி 2,581 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,492 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரம் 6,628 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 1,418 மெட்ரிக் டன் என மொத்தம் 15 ஆயிரத்து 751 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது. கடந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் 148 மனுக்கள் பெறப்பட்டது. அதில் 128 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், 20 மனுக்கள் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இல்லாததால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பட்டா குறித்த கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான உரங்கள் மற்றும் விதைகள் கையிருப்பில் உள்ளன. பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு விதை நெல் மற்றும் உரம் தட்டுப்பாடின்றி கிடைத்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளனது. இவ்வாறு கலெக்டர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், இணை பதிவாளர் இளஞ்செல்வி, வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமிகாந்தன், நேர்முக உதவியாளர் (விவசாயம்) கதிரேசன், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர்கள், அனைத்து துறைகளின் அலுவலர்கள் மற்றும் அனைத்து வட்டாரங்களின் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.