உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாயால் வடை சுட்டே நகை, பணம் அபேஸ்

வாயால் வடை சுட்டே நகை, பணம் அபேஸ்

பெண்ணாடம்:வியாபாரிகளிடம், நுாதன முறையில் நகை, பணம் 'அபேஸ்' செய்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த இறையூரில், நிர்மல்குமார் என்பவர் மெடிக்கல் ஷாப் வைத்துள்ளார். இவரது கடையில், பெரியகொசப்பள்ளத்தை சேர்ந்த மகேஸ்வரி, 24, வேலை பார்க்கிறார். மகேஸ்வரி நேற்று காலை கடையில் இருந்தபோது, 40 வயது நபர் ஒருவர் கடைக்கு வந்தார். அவர், 'மெடிக்கல் உரிமையாளர் உன் கழுத்தில் உள்ள செயின் போன்று ஒரு செயின் செய்ய சொன்னார். அதை கழற்றி கொடுத்தால், மொபைல் போனில் போட்டோ எடுத்துவிட்டு தருகிறேன்' என, கூறியுள்ளார். நம்பிய மகேஸ்வரி, ஒன்றரை சவரன் செயினை கழற்றி கொடுத்தார். செயினுடன் அந்த நபர் பைக்கில் தப்பினார். பெண்ணாடம் போலீசார், 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்ததில், கீழக்கரையை சேர்ந்த சரவணன், 43, என, தெரிந்தது. இவர் மீது, பல போலீஸ் ஸ்டேஷன்களில் திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன. அதேபோல, திட்டக்குடி அடுத்த ஆவினங்குடியை சேர்ந்தவர் பாலாஜி, 40; இவரது கடைக்கு, நேற்று காலை வந்த சரவணன், 'என்னிடம், 5,000 ரூபாய் சில்லரை உள்ளது. ஊழியரை வீட்டுக்கு அனுப்பினால், கொடுத்துவிடுவதாக கூறினார். நம்பிய பாலாஜி, ஊழியர் கந்தசாமியை அனுப்பினார். அவரை அருகிலுள்ள சைக்கிள் கடை அருகே நிற்கவைத்து விட்டு, மீண்டும் மளிகை கடைக்கு சென்ற சரவணன், 'கந்தசாமியிடம் சில்லரை கொடுத்து விட்டேன். அவர் எண்ணிக்கொண்டு இருக்கிறார்' எனக்கூறி, 5,000 ரூபாயை வாங்கி சென்றார். நீண்டநேரம் காத்திருந்த கந்தசாமி வந்த பின்தான், பாலாஜிக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. இரு இடங்களில் கைவரிசை காட்டிய சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை