நிவாரணம் பெற நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள்
நெல்லிக்குப்பம்,: தமிழக அரசின் தவறான முடிவால் வெள்ள நிவாரணம் பெற நீண்ட நேரம் ரேஷன் கடைகளில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.கடலூர்,விழுப்புரம் உள்ளிட்ட புயல்,வெள்ளம் பாதித்த மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரணமாக ரூ. 2 ஆயிரம் ரொக்கம், அரிசி, துவரம் பருப்பு ஆகியவற்றை வழங்க உத்தரவிட்டது. இந்த நிவாரணம் வழங்கும் பணி கடந்த 3 நாட்களாக ரேஷன் கடைகள் மூலம் நடந்து வருகிறது. நிவாரணம் வழங்க துவங்கிய முதல் 2 நாட்கள் பாதிக்கப்பட்ட மக்களின் ரேஷன் அட்டை ஜெராக்ஸ் காப்பியை வாங்கி கொண்டு நிவாரணம் வழங்கினர்.இதனால் விரைவாக மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்தது. மக்களும் கடைக்கு வந்தவுடன் சிரமமின்றி நிவாரணம் பெற்றனர். ஆனால் நேற்று முதல் நிவாரணம் பெறும் குடும்ப உறுப்பினரின் கைரேகை பதிவை பெற்று நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஒரு பயனாளியின் கைரேகை பெறவே 5 நிமிடங்களுக்கு மேலாகிறது.முதியவர்களின் கைரேகை பதிவாவதில் சிக்கல் ஏற்பட்டதால் விற்பனையாளரிடம் வாக்குவாதம் செய்தனர்.இதனால் நிவாரணம் பெற வந்த மக்கள் வெய்யிலில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மக்கள் வெள்ளத்தால் பாதித்து சிரமப்படும் சமயத்தில் நிவாரணம் பெற காக்க வைத்ததால் தமிழக அரசின் மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நிவாரணம் வழங்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டுமானால் ரேஷன் அட்டை நகலை பெற்று வழங்குவது நல்லது.