கட்டாய கல்வி சட்டத்தில் இந்த ஆண்டு சேர்க்கை கேள்விக்குறி: 2 ஆண்டு கட்டணம் வழங்காமல் இழுத்தடிக்கும் அரசு
கடலுார்: கட்டாய கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கூடிய இணைய தளம் திறக்கப்படாமல் உள்ளதால் விண்ணப்பிக்க முடியாமல் பெற்றோர் தவித்து வருகின்றனர்.இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் 4 ஆகஸ்ட் 2009 முதல் லோக்சபாவில் இயற்றப்பட்டது. அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பின்தங்கிய குழந்தைகளுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். இந்த சட்டம் கடந்த 2010ல் இருந்து ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் தவிர இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டம் கல்வியை 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி ஒரு அடிப்படை உரிமை என்றும் தொடக்கப் பள்ளிகளில் குறைந்தபட்ச விதிமுறைகளுக்கு வழிவகுத்தது. இது அனைத்து தனியார் பள்ளிகளும் நலிவடைந்த குழந்தைகளுக்கு 25 சதவீதம் இடங்களில் முன்பதிவு செய்ய வேண்டும். பள்ளிக்கு அருகாமையில் குடியிருப்போர், குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். இது நடைமுறையில் இருந்த அனைத்து அங்கீகரிக்கப்படாத பள்ளிகளுக்கு தடை மற்றும் நன்கொடை அல்லது முதல் தொகை மற்றும் சேர்க்கைக்கு குழந்தை அல்லது பெற்றோருக்கு எந்த நேர்காணலும் வைக்க கூடாது. அதேபோல பிரபலமான தனியார் பள்ளிகளுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகள் மூலமாக நேரில் வந்து குலுக்கல் முறையில் மாணவர்கள் சேர்க்கை வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தினால் மாணவர்கள் மட்டும் அல்லாமல் சில பள்ளிகளும் பயன்பெற்று வந்தன. மாணவர்கள் சேர்க்கை வழங்கும் பள்ளிகளுக்கு அரசு மூலம் கல்விக்கட்டணம் வழங்கப்பட்டு வந்தது. சில ஆண்டுகள் சிறப்பாக வழங்கப்பட்டு வந்த இந்த கட்டணம் தற்போது 23-24, 24-25ம் ஆண்டுகளில் கட்டாய கல்வியில் சேர்ந்து படித்த மாணவர்கள் தாம் படித்த பள்ளிகளுக்கு இன்னும் அரசு கட்டணம் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.தமிழகம் முழுவதும் இதபோன்ற கட்டணங்களை பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டியது 100 கோடிக்கு மேல் பாக்கி இருக்கலாம் என தெரிகிறது. அதனால் இந்த ஆண்டு கட்டாய கல்வி ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கவே முடியாமல் உள்ளது. குறிப்பிட்ட இணைய தளம் விண்ணப்பிக்க ஓப்பனாகவில்லை. அதனால் பெற்றோர்கள் பல முறை முயற்சி செய்து பார்த்துவிட்டு என்ன செய்வது என்று புரியாமல் தவித்து வருகின்றனர்.பல தனியார் பள்ளிகள் சேர்க்கை முடித்துவிட்டன. இன்னும் 2 வாரங்களில் பள்ளிகள் மீண்டு திறக்கப்படவுள்ள நிலையில் கட்டாய கல்வி சட்டத்தில் குழந்தைகளை சேர்க்க முடியுமா என்பது கேள்விக்குறியாகி வருகிறது.