இன்று வெற்றி பெறாதவர்கள் நாளை வெற்றி பெறலாம்
புதுச்சேரி : 'வெற்றியின் பயன் நல்ல மனிதராக உருவாக்குவதில் இருக்க வேண்டும்' என, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரான நீதிபதி ராமசுப்ரமணியன் பேசினார்.தினமலர் நாளிதழ் பட்டம் இதழ் மற்றும் ஆச்சார்யா கல்வி குழுமம் சார்பில், ஜிப்மர் கலையரங்கில் நேற்று நடந்த மெகா வினாடி வினா போட்டி பரிசளிப்பு விழாவில் அவர், பேசியதாவது;'தினமலர்' நாளிதழுக்கு, 3 காரணங்களுக்காக வாழ்த்து சொல்ல வேண்டும். பொதுவாக 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து, 3 ஆண்டுகள் கல்லுாரியில் படித்த பிறகு பட்டம் கிடைக்கும். ஆனால், பள்ளியில் படிக்கும் போதே பட்டத்தை தினமலர் கொடுத்துள்ளதற்கு வாழ்த்துகிறேன்.பட்டம் என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் 2 விதமான சொற்கள் உள்ளன ஒன்று டிகிரி; மற்றொன்று கைட். டிகிரி என்பது நாம் படித்து வாங்கும் பட்டம், கைட் என்பது காற்றோட்டம் உள்ள இடத்தில் பறக்க விடும் பட்டம். வீட்டிற்குள்ளே சட்டத்திற்குள் மாட்டி வைக்கும் பட்டத்தையும், உங்களை உயர உயர பறக்க வைக்க கூடிய பட்டத்தையும் பள்ளிக்கூடத்திலேயே தினமலர் கொடுத்திருக்கிறது.வாசிப்பு என்பது கொஞ்சம் கொஞ்சமாக இந்த கால கட்டத்தில் குறைந்து கொண்டிருக்கிறது. நாங்கள் படிக்கும் கால கட்டத்தில் வாசிப்பு என்பது மனிதனின் நேசிப்பாகவும், சுவாசிப்பாகவும் இருந்தது.தற்போது, வாசிப்பு என்பது ஸ்மார்ட் போனில் பார்ப்பது மட்டுமே என்றாகிவிட்ட இந்த காலகட்டத்தில், குழந்தைகளை படிக்க வைத்திருக்கிறது பட்டம் இதழ். அதுவும் தமிழில் படிக்க வைத்திருக்கிற பெருமை தினமலர் நாளிதழுக்கு உள்ளது. இது பாராட்ட வேண்டிய 3வது காரணம். குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், இதுபோன்ற நிகழ்ச்சிக்கு அனுப்பிய ஆசிரியர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். அதற்கு காரணம், குழந்தைகளின் முகம் தொலைக்காட்சியில் தெரிந்தால் தான் வெற்றி என நினைத்துக் கொண்டு ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர் இருக்கும் சூழ்நிலையில், நாளிதழ் படிக்க வைத்து இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற வைத்து அறிவை பெருக்க வேண்டும், ஆடம்பரத்தை பெருக்க தேவையில்லை என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள பெற்றோர், ஆசிரியர்களுக்கும் எனது வணக்கம்.தினமலர் மெகா வினாடி - வினா போட்டிக்காக, 4 மாதங்கள், 150 பள்ளிகளுக்கு சென்று தொடர்ந்து முயற்சி எடுத்ததால், இன்று வெற்றி உங்கள் கையில் கிடைக்கிறது. அந்த வெற்றிக்கு பின்னால் பாடுபடும் குழு எப்படியெல்லாம் உழைக்கிறது என்பதை எண்ணி இந்த கருத்துக்களை சுமந்து செல்ல வேண்டும்.எந்த அளவிற்கு படிக்கிறாயோ அந்த அளவுக்கு இன்பமும், இன்னமும் படிக்கவில்லையே என்ற ஆதங்கத்தை எது கொடுக்கிறதோ அது தான் கல்வி. நமக்கு தெரியாத ஒரு கதவை திறக்கும்போது, மூடிக்கிடக்கும் 100 கதவுகளை நான் பார்க்கிறேன் என ஆல்பர்ட் ஐன்ஸ்டின் கூறினார். இது கல்வியின் சிறப்பு.கல்வி என்பது வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது. அள்ள அள்ள குறையாது. உங்கள் பையில் 100 ரூபாய் இருந்தால், எதிரில் வந்தவருக்கு 50 கொடுத்தால், உங்கள் கையிருப்பு 50 ஆக குறையும். இதுபோல கொடுக்க கொடுக்க நீங்கள் வைத்திருக்கும் செல்வம் குறைந்து கொண்டே வரும். ஆனால், ஆசிரியர் கொடுக்க கொடுக்க அவர் வைத்திருக்கும் அறிவு குறையாது. உங்களது அளவு அதிகரிப்பது தான் கல்வியின் சிறப்பு.கல்வியின் பயன் என்னென்றால், இன்று எல்லோரும் படிக்கிறோம். படிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. நாம் பெறாத கல்வியை நமது குழந்தை பெற வேண்டும் என பெற்றோர் நினைக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் கல்வியின் பயன் என்ன என்பதை ஆசிரியர்கள், பெற்றோர் சிந்தித்து பார்க்க வேண்டும்.எவன் ஒருவனுக்கு அடுத்தவர் கண்களில் துன்பம், கண்ணீர் வரும்போது அதை துடைக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லையோ அவனுக்கு அறிவினால் எந்த பயனும் இல்லை என திருவள்ளுவர் கூறினார். கல்வியை கற்கும்போதே கல்வியின் பயன் என்ன என்பதை கற்க வேண்டும்.கல்வியின் பயன் என்பது நீங்கள் எத்தனை பேருக்கு, எந்த அளவுக்கு உபயோகமாக, பயனுள்ளவர்களாக, அன்பு, கருணை மிக்கவர்களாக இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் இன்று பெறும் வெற்றியின் அளவுகோலாக இருக்கும். வாழ்க்கையில் இரண்டு காரணங்களுக்காக ஒருவன் வெற்றி பெற வேண்டும். யார் எல்லாம் வாழ்க்கையில் உயர கை கொடுத்து உதவினார்களோ அவர்களுக்கு திரும்ப செலுத்த கூடிய ஒரே நன்றி உங்களின் வெற்றி. யாரெல்லாம் உங்களை புழு பூச்சியை போல நினைத்து மிதித்தார்களோ அவர்களை பழிவாங்க கூடிய ஒரே வழியும் வெற்றி தான். எனவே வெற்றி என்பது மனிதனுக்கு முக்கியம். இந்த கால கட்டம் மிகப்பெரிய ஓட்ட பந்தயமாக மாறிவிட்டது. இதில் யார் முன்னே வருகிறார்கள் என்பது மிகப்பெரிய பிரச்னையாக மாறிவிட்டது. ஒரு அமெரிக்கர், ஜப்பான் நபர் காட்டில் சென்று கொண்டிருந்தனர். எதிரில் ஒரு புலி பசியுடன் வந்து விட்டது. இருவரும் பயந்து நடுங்கினர். ஜப்பான்காரன் மட்டும் தனது காலில் அணிந்திருந்த தோல் ஷூவை கழற்றிவிட்டு, ஸ்போர்ட்ஸ் ஷூ மாட்டிக் கொண்டான். அப்போது, ஸ்போர்ட்ஸ் ஷூ போட்டுக் கொண்டால் புலியை விட வேகமாக ஓட முடியுமா என அமெரிக்க நபர் கேட்டார்.புலியை விட வேகமாக ஓடுவது என் நோக்கம் இல்லை. உன்னை விட வேகமாக ஓடுவது தான் என் நோக்கம். உன்னை விட வேகமாக ஓடிவிட்டால், புலியிடம் நீ மாட்டிக் கொள்வாய். நான் தப்பித்துக் கொள்வேன் என ஜப்பான்காரர் கூறினார்.அப்படிப்பட்ட மோசமான ஓட்ட பந்தயம் நிறைந்த உலகத்தில் நீங்கள் இருக்கும்போது, வெற்றிக்கான பரிமாணத்தை வேறு விதமாக புரிந்து கொள்ள வேண்டும். இன்று கிடைக்கும் வெற்றி, வெற்றியா. இன்று பெறாதது 30 ஆண்டுகளுக்கு பிறகு எப்படி உருவாகுகிறோம் என்பது வெற்றியா என்பதை தீர்மானிக்க வேண்டும்.கடந்த 30 ஆண்டிற்கு முன்பு ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு இருவர் போட்டியிட்டனர். டில்லியில் தங்கி பயிற்சி பெற்றனர். அதில், ஒருவர் தேர்ச்சி பெற்று 30 ஆண்டு கடைசி கட்டத்தில், தபால் நிலையத்தின் தலைமை அதிகாரியாக இருந்தார். ஐ.ஏ.எஸ்., தேர்வில் தோல்வி அடைந்த நபர் வழக்கறிஞராகி, உயர்நீதிமன்ற நீதிபதியாக மாறி, உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ளார். அன்று தோல்வி அடைந்தவர் இன்று வெற்றி பெற்றுள்ளார்.வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என்பது இன்றைக்கு நாம் பெறும் முடிவை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுவது அல்ல. 30 ஆண்டுகளுக்கு பிறகு நம்மை எது அதுவாக உருவாக்கி இருக்கிறதோ அது கொடுப்பது வெற்றி என்பதை புரிந்து கொள்ளுங்கள். எந்த வெற்றி பெற்றாலும், வெற்றியின் பயன் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.நீங்கள் எப்படிப்பட்ட மனிதனாக இருந்தாலும், கல்வி அறிவு, செல்வம் பெற்று இருந்தாலும், அந்தஸ்து பெற்று இருந்தாலும் நீங்கள் மறைந்த பின்னால் எத்தனை பேர், என்ன காரணத்திற்காக எத்தனை காலம் உங்களை நினைவில் வைத்துள்ளார்கள் என்பதில் தான் வெற்றி உள்ளது.படிக்கும் காலத்தில் நல்ல மாணவர்களாக, உடன் பிறந்த சகோதரர்களுக்கு பயன் உள்ளவர்களாக, பெற்றோருக்கு நல்ல குழந்தையாக, பணியிடத்தில் நல்ல வேலையாட்களாக இருக்கிறீர்களா என்பதில் வெற்றி அடங்கி இருக்கிறது.தங்கள் பிள்ளைகளை டாக்டர், இன்ஜினியர், நீதிபதி, ஐ.ஏ.எஸ்., ஆக விரும்பும் பெற்றோர், நல்ல மனிதராக உருவாக வேண்டும் என நினைப்பது கிடையாது. எனவே, வெற்றியின் பயன் நல்ல மனிதராக உருவாகுவதில் இருக்க வேண்டும். இன்று வெற்றி பெற முடியாதவர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் வெற்றி பெறலாம் .இவ்வாறு அவர் பேசினார்.