உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெற் பயிரில் இலைச்சுருட்டுப்புழு: கட்டுப்படுத்த ஆலோசனை

நெற் பயிரில் இலைச்சுருட்டுப்புழு: கட்டுப்படுத்த ஆலோசனை

விருத்தாசலம்: நெற்பயிரில் இலை சுருட்டுப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து, விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் செய்திக்குறிப்பு: தற்போது வானிலை காரணமாக, நெற்பயிரில் இலைச்சுருட்டுப்புழுவின் தாக்கம் தென்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இலைகள் நீள வாக்கில் மடிக்கப்பட்டிருக்கும். புழுக்கள் இலைகளின் பச்சை நிற திசுக்களை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்துவிடும். தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல காட்சியளிக்கும். இலைகள் நீள்வாட்டில் சுருண்டு புழுக்கள் அதனுள்ளே இருந்து விடும். இலை சுருட்டு புழுவின் அந்துப் பூச்சி மஞ்சளான பழுப்பு நிற இறக்கைகளுடன் காணப்படும். அவற்றின், முன் பின் இறக்கைகளில் அடர்ந்த நிறத்துடன் அலை அலையாய் கோடுகள் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

தேவைக்கு அதிகமாக தழைச்சத்து இடுவதை தவிர்க்கவும். வயல் வரப்புகளை சுத்தமாகவும், வயலில் களைகள் இல்லாமலும் பார்த்து கொள்ள வேண்டும். அந்துப்பூச்சியைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகளை ஏக்கருக்கு 5 என்ற அளவில் பயன்படுத்தலாம் அல்லது விளக்குப் பொறிகளை இரவு நேரங்களில் 2 ஏக்கருக்கு ஒன்று என்கிற அளவில் வைத்து அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். இதனை கட்டுப்படுத்த ஏக்கருக்கு கார்போ சல்பான் 400 மி.லி., அல்லது கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 600 கிராம் அல்லது குளோரான்ட்ரானிலிப்ரோல் 18.5 (60 மி.லி.,) அல்லது புளுபெண்டிமைடு 39.35 (20 கிராம்) என்ற அளவில், காலை அல்லது மாலை நேரத்தில் தெளிக்கவும். உரிய பாதுகாப்பு முறைகளை கையாண்டு, நெற்பயிரை காத்திட வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை