விருத்தாசலம் நகரில் போக்குவரத்து நெரிசல்... அதிகரிப்பு; அடிக்கடி ஆக்கிரமிப்பு அகற்றியும் தீர்வு இல்லை
விருத்தாசலம்: விருத்தாசலம் நகரில் சாலைகளை அகலப்படுத்தியும், ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால்போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியாமல், மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.கடலுார் - திருச்சி, சிதம்பரம் - சேலம், சென்னை - ஜெயங்கொண்டம் மார்க்கத்தில், விருத்தாசலம் முக்கிய சந்திப்பு. அரசு மற்றும் தனியார் பஸ், கார், வேன் மட்டுமின்றி கடலுார் துறைமுகம், நெய்வேலி என்.எல்.சி., மற்றும் தனியார் சிமென்ட், சர்க்கரை ஆலைகள், சேலம் இரும்பு உருக்காலை போன்ற பெரு நிறுவனங்களுக்கு கனரக வாகனங்கள் இதன் வழியாக செல்கின்றன.அதிக வாகன போக்குவத்து காரணமாக, கடலுார் - விருத்தாசலம் - சேலம் (சி.வி.எஸ்., சாலை) தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, 275 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதுபோல், விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை இடையே 22 கி.மீ., சாலை, 136 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டது.மேலும், நகரின் பிரதான ஜங்ஷன் சாலை, பெண்ணாடம் ரோடு, தென்கோட்டை வீதி உள்ளிட்ட சாலைகள் அனைத்தும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சிறப்பு திட்டங்கள் மூலம் பிளாட்பார்ம் வசதியுடன் அகலப்படுத்தப்பட்டன.ஆனால், இந்த சாலைகளில் ஆக்கிரமிப்பு காரணமாக எதிரெதிர் திசைகளில் வாகனங்கள் சென்று வர முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக கடைகளின் முன்பு ெஷட், விளம்பர பலகைகள், பேனர்கள் வைத்துள்ளதால், வாகனங்கள் சாலையில் நிறுத்த வேண்டிய நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீசார் இணைந்து, கண்துடைப்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவர். ஓரிரு நாட்களில் மீண்டும் சாலை முழுவதும் ஆக்கிரமிப்பது தொடர்கிறது.அந்த வகையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த மாதம் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்போது, வியாபாரிகள் தரப்பில் அவகாசம் கேட்டதன்பேரில், தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனால் நகரம் முழுதும் ஆக்கிரமிப்பு அதிகரித்து போக்குவரத்து பாதிப்பதுடன் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.எனவே, விருத்தாசலம் நகர பிரதான சாலைகளில் முளைத்துள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றிட அனைத்துத்துறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பார்க்கிங் இல்லாமல் வணிக நிறுவனங்கள்
பெருவணிக நிறுவனங்களில் ஒன்றிரண்டு தவிர மற்றவை, பார்க்கிங் வசதியின்றி உள்ளன. இவற்றுக்கு வருவோர், கடைகளுக்கு முகப்பில் டூவீலர், கார்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால், அவர்கள் திரும்பி வந்து வாகனங்களை எடுக்கும் வரை, சாலையின் இருபுறம் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து பாதிக்கிறது. எனவே, பிரதான சாலைகளில் தற்காலிக வாகன நிறுத்தங்களை உருவாக்கி நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும். சாலையிலேயே பஸ்கள் நிறுத்தும் அவலம்
பஸ் நிலைய முகப்பிலேயே பஸ்களை நிறுத்தி, பயணிகளை இறக்கி விடுவதால், ஜங்ஷன் சாலையில் வாகனங்கள் ஆங்காங்கே காத்திருக்கும் அவலம் தொடர்கிறது.அதுபோல், ஆட்டோ, தள்ளுவண்டிகளாலும் போக்குவரத்து பாதிக்கிறது. எனவே, பஸ் நிலைய முகப்பில் பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதை தடுக்க வேண்டும். அதுபோல், பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தியுள்ள ஆட்டோக்கள், தள்ளுவண்டி உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்றிட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.