பாசஞ்சர் ரயில் விபத்து காரணமாக 4 மணி நேரம் ரயில்கள் நிறுத்தம்
கடலுார் :கடலுார் - சிதம்பரம் ரயில் பாதையில் விபத்து ஏற்படுத்திய பாசஞ்சர் ரயில் 4 மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்ததால் மற்ற ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.கடலுார் அடுத்த செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் மாணவ, மாணவியர் 3 பேர் இறந்தனர். ஒரு மாணவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த கோர விபத்தினால் கடலுார் - சிதம்பரம் ரயில் பாதையில் பாசஞ்சர் ரயில் நிறுத்தப்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர்.இந்நிலையில் விபத்து நடந்த இடத்தை திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் ஆய்வு செய்தார்.இந்த விபத்திற்கு கேட் கீப்பர் மட்டும் காரணம் இல்லை. இந்த பாதையில் இதற்கு முன்பு 7:03 மணிக்கு ஒரு ரயில் சென்றுள்ளது. இன்னும் 2, 3 மணி நேரத்தில் இந்த ரயில்பாதை சீராகி விடும் என்றார்.அதன்படி விபத்து ஏற்படுத்திய பாசஞ்சர் ரயில் 4 மணி நேரத்திற்கு பின் புறப்பட்டு சென்றது. அதனைத் தொடர்ந்து அந்த ரயில் பாதையில் மற்ற ரயில்கள் இயக்கப்பட்டன.