வில்வநகர் சிறுவர் விளையாட்டு பூங்காவில் வடியாத மழைநீர்
கடலுார்; வில்வ நகர் மாநகராட்சி சிறுவர் விளையாட்டு பூங்காவில் மழைநீர் வடியாமல் தேங்கி கிடப்பதால், சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.கடலுார் மாநகராட்சி வில்வ நகரில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, மாநகராட்சி சார்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில், சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள் மற்றும் முதியவர்கள் நடைபயிற்சி செய்ய நடைபாதை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பெஞ்சல் புயலால் பெய்த மழையால், கடலுார் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. அதன்படி, இந்த பூங்காவில் தேங்கிய மழைநீர் வடியாததால், சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.எனவே, பூங்காவில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.