வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து, வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.இது குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்தோர், அதற்கும் மேலான கல்வித் தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, புதுப்பித்தவர்கள், 01.10.2024 அன்று, ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, அரசு உதவித்தொகை வழங்குகிறது. மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவித் தொகையை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 01.10.2024 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், மற்றவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.கடலுார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்றவராகவோ அல்லது பெறுபவராகவோ இருந்தால் விண்ணப்பிக்க வேண்டாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, நவ., 29ம் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அனைத்து அசல் கல்விசான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதார் அட்டையுடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.