போதைப்பொருள் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்
கடலுார்: போதைப்பொருள் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 7 லட்சத்து 25ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டன. கடலுார் மாவட்டத்தில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் தாலுகா போலீஸ் நிலையங்களில் போதைப்பாருட்கள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 26 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம், கோர்ட் உத்தரவின்படி பொது ஏலம் விடப்பட்டது. எஸ்.பி., ஜெயக்குமார் முன்னிலையில் ஆயுதப்படை வளாகத்தில் நடந்த பொது ஏலத்தில், 23 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் ஏலம் போனது. மீதம் மூன்று இருசக்கர வாகனங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் ஏலம் விடப்பட்ட தொகை 6 லட்சத்து 14ஆயிரத்து 700 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., 1 லட்சத்து 10ஆயிரத்து 646 ரூபாயுடன் சேர்த்து 7 லட்சத்து 25ஆயிரத்து 346 ரூபாய் வசூலானது. வசூலான தொகை அரசு கஜானாவில் சேர்க்கப்பட்டது. பொது ஏலத்தில் ஒரு புதிய புல்லட் மோட்டார் சைக்கிள் ஏலம் விடப்பட்டது. அப்போது பெண் ஒருவர், அந்த புல்லட் தனது தம்பிக்காக ஆசையாக வாங்கிக்கொடுத்தது. நானே ஏலம் வாங்கிக்கொள்கிறேன் என ஒரு லட்ச ரூபாய்க்கு ஏலம் கேட்டார். மற்றொருவர் ஒரு லட்சத்து 10ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் கேட்டதால், அந்த பெண் கதறி அழுதார். விசாரித்த எஸ்.பி., புல்லட் உரிமையாளர் என்பதால் அவருக்கு விட்டு கொடுக்க கேட்டுக்கொண்டார். அதையடுத்து அந்த பெண்ணுக்கே அந்த புல்லட் ஏலத்தில் விற்கப்பட்டது.