நிவாரணம் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
காட்டுமன்னார்கோவில்; காட்டுமன்னார்கோவில் அருகே முறையாக நிவாரணம் வழங்கப்படவில்லை எனக் கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. காட்டுமன்னார்கோவில் பகுதியில் கன மழை, வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை செய்து கொடுத்தது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எள்ளேரி பகுதி மக்கள் தங்களுக்கு முறையான நிவாரணம் வழங்கவில்லை எனக் கோரி நேற்று மாலை 6:00 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, சமாதானம் செய்தனர். அதையடுத்து அனைவரும் மாலை 6:30 மணியளவில் கலைந்து சென்றனர். இதனால் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.