உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மனைப்பட்டா வழங்க கோரி கிராம மக்கள் போராட்டம்: விருத்தாசலத்தில் பரபரப்பு

 மனைப்பட்டா வழங்க கோரி கிராம மக்கள் போராட்டம்: விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாசலம்: வீட்டு மனை பட்டா வழங்க கோரி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 44 பேரை போலீசார் கைது செய்ததால், பரபரப்பு நிலவியது. கம்மாபுரம் அடுத்த வடக்கு வெள்ளூர் கிராமத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட அருந்ததியர் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் என்.எல்.சி., விரிவாக்க பணிக்காக நிலம் வழங்கியுள்ளனர். இதனால், அவர்களுக்கு அரசு சார்பில் மனைபட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த இடத்தை அதிகாரிகள் அத்து காட்டாமல் இருந்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. தங்களுக்கு தேர்வு செய்த இடத்திலேயே மனைபட்டா வழங்க வேண்டும். புதிய இடத்தில் பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுப்பதை நிறுத்த வேண்டும் என கூறி, விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன் விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலர் குணசேகரன் தலைமையிலான கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா பேச்சுவார்த்தை நடத்தினார். டிசம்பர் இறுதிக்குள் தங்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். முதலில் தேர்வு செய்த இடத்தில் மனைபட்டா வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், அந்த கோரிக்கையை ஆர்.டி.ஓ., மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், தாலுகா அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த விருத்தாசலம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட, 44 பேரை கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ