வடலுாரில் பன்னாட்டு மையத்திற்கு எதிர்ப்பு விருத்தாசலத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம்: வடலுார் பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விருத்தாசலத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது.வடலுாரில் சத்திய ஞானசபை பெருவெளியில் அரசு சார்பில் ரூ. 100 கோடியில் பன்னாட்டு மையம் அமைக்கும் பணி துவங்கி உள்ளது.இதனைக் கண்டித்தும், மாற்று இடத்தில் அமைக்க கோரியும் வள்ளலார் பணியகம், தெய்வத்தமிழ் பேரவை சார்பில் நேற்று மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது.அதற்கு விருத்தாசலம் பாலக்கரையில் போலீசார் அனுமதி மறுத்ததால், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன், மாநில சன்மார்க்க சங்க வழிபாட்டுக்குழு தலைவர் இளங்கோ, தெய்வத் தமிழ் பேரவை வேந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.இதேபோல் திருச்சி ரயில் நிலையம், சேலம் கோட்டை மைதானம், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில், கும்பகோணம் காந்தி பூங்கா, தஞ்சாவூர் ரயிலடி ஆகிய பகுதிகளில் உண்ணாவிரதம், அமைதியான முறையில் அறப்போட்டமும் நடந்தது என மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் தெரிவித்தார்.