உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொழுதுார் அணைக்கட்டில் தண்ணீர் திறப்பு கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை

தொழுதுார் அணைக்கட்டில் தண்ணீர் திறப்பு கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை

ராமநத்தம்: தொழுதுார் அணைக்கட்டிலிருந்து 4,500 கனஅடி தண்ணீர் வெளியேறுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.கடலுார் மாவட்டம், ராமநத்தம் அருகே வெள்ளாற்றின் குறுக்கே தொழுதுார் அணைக்கட்டு உள்ளது. பெரம்பலுார் மற்றும் சேலம் மாவட்டங்களில் பெய்யும் மழைநீர், வெள்ளாற்றில் பாய்ந்து, தொழுதுார் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படும்.இங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் கடலுார் மற்றும் பெரம்பலுார் மாவட்டங்களைச் சேர்ந்த 26 ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதுடன், 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.புயல் காரணமாக சேலம், பெரம்பலுார் மாவட்டங்களில் பெய்த மழைநீர், வெள்ளாற்றில் பாய்ந்து தொழுதுார் அணைக்கட்டுக்கு வந்தது.அதனைத்தொடர்ந்து, தொழுதுார் அணைக்கட்டில் நேற்று முன்தினம் மாலை தண்ணீர் திறக்கப்பட்டது. அதில், 1,500 கனஅடி நீர் வெள்ளாற்றிலும், 3000 கனஅடி நீர் பாசன வசதிக்காக வெலிங்டன் நீர்த்தேக்கத்திற்கும் திறக்கப்பட்டது. அணைக்கட்டிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் வெள்ளாற்றின் கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சேத்தியாத்தோப்பு

சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் நேற்று காலையில் மணிமுத்தாறு, வெள்ளாறு ஆகியவற்றில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்ததையடுத்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு நிரம்பியது. அதனைத் தொடர்ந்து வெள்ளாற்றில் அனைத்து ஷட்டர்களையும் திறந்து 20 ஆயிரம் கன அடி வரை தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.அணைக்கு வரும் தண்ணீர் படிப்படியாக குறைந்து வந்ததைத் தொடர்ந்து பிற்பகல் 3:00 மணி முதல் 16 ஆயிரம் கன அடி வரை தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை