உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கட்டடத்தை காணோம்: விவசாயிகள் புகாரால் பரபரப்பு

கட்டடத்தை காணோம்: விவசாயிகள் புகாரால் பரபரப்பு

சிதம்பரம் : ''சிதம்பரம் அருகே அரசு மானியத்தில் விவசாயிகள் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட கட்டடத்தை காணவில்லை'' என, கலெக்டரிடம் புகார் அளிக்கப் பட்டுள்ளது.சிதம்பரம் அடுத்துள்ள வல்லம்படுகை தோட்டக்கலை துறை உழவர் உற்பத்தியாளர் மன்றம் சார்பில், அதன் தலைவர் வசந்தன் மற்றும் விவசாயிகள் கடலுாரில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.அதில், 'வல்லம்படுகையில், உழவர் உற்பத்தியாளர் குழு சார்பில் தனி நபருக்கு சொந்தமான இடத்தில் விவசாயிகள் நிதி மற்றும் அரசு மானிய நிதி ரூ.3 லட்சம் என, மொத்தம் ரூ.7 லட்சம் செவில் 2019ம் ஆண்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கான கட்டடம் (சிப்பம் கட்டும் அறை) தோட்டக்கலை துறை மூலமாக கட்டித்தரப்பட்டது.இப்பகுதி தோட்டக்கலை விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் வாழை, மிளகாய், தக்காளி மற்றும் காய்கறிகளை அந்த இடத்தில் பாதுகாப்பாக வைத்து விற்பனைக்கு எடுத்து செல்வர். கடந்த 2 மாதங்களாக மழை காரணமாகவும், அறுவடை முடிந்த நிலையிலும், விளைச்சல் இல்லாததால், அந்த கட்டடத்தில் விவசாயிகள் யாரும் காய்கறி வைக்க செல்லவில்லை. இந்நிலையில், கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மழை விட்டபின்பு, விவசாயிகளுக்கான சிப்பம் கட்டும் அறை கட்டடத்தை காணவில்லை. அந்த இடத்தில் கட்டடம் இருந்ததற்கான அறிகுறியே இல்லாத அளவில் இடித்து அகற்றப்பட்டுள்ளது. கட்டடத்தை இடித்து அகற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, கட்டடத்தை மீண்டும் கட்டித்தர வேண்டும்' என கூறப்பட்டிருந்தது. அரசு மானியத்தில் கட்டப்பட்ட விவசாயிகளுக்கான கட்டடம் இடிக்கப்பட்டது குறித்து உடனடியாக விசாரணை செய்து அறிக்கை அளிக்குமாறு வேளாண் துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ