உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆக்கிரமிப்பால் திணறல் விருதை தென்கோட்டை வீதிக்கு விமோசனம் எப்போது

ஆக்கிரமிப்பால் திணறல் விருதை தென்கோட்டை வீதிக்கு விமோசனம் எப்போது

சென்னை- - ஜெயங்கொண்டம், கடலுார் - திருச்சி, சிதம்பரம் - சேலம் மார்க்கத்தில், விருத்தாசலம் முக்கிய சந்திப்பு. இவ்வழியாக பஸ், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களும், என்.எல்.சி., நிறுவனம், தனியார் சர்க்கரை, சிமென்ட் ஆலைகள், கடலுார் துறைமுகத்தில் இருந்து மீன் லோடு ஏற்றிச் செல்லும் வாகனங்களும் செல்கின்றன.வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், நகருக்கு வெளியே இருபுறமும் புறவழிச்சாலைகள் போடப்பட்டன. இருப்பினும் நகரில் வாகன நெரிசல் குறையாததால் நெடுஞ்சாலைத்துறை வாயிலாக பல்வேறு திட்டங்கள் மூலம் இருவழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டது.அதன்படி, விருத்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள தெற்கு கோபுரம், வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு கோபுர சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு, இருபுறம் புட்பாத் அமைக்கப்பட்டது. இதன் மூலம் வணிக நிறுவனங்களுக்கு செல்வோர் நடைபாதையில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.ஆனால், தள்ளு வண்டிகள், ஆட்டோ, சரக்கு வாகனங்கள் சாலையின் நடுவே நிறுத்தி செல்வதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கிறது. மேலும் தெற்குகோபுர சாலை வழியாக அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு செல்லும் ஆம்புலன்சுகளும் வாகன நெரிசலில் சிக்குவதால், குறித்த நேரத்தில் செல்ல முடியவில்லை.இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதும், அதிகாரிகள் இணைந்து அவசர கதியில் கண்துடைப்பாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபடுகின்றனர். ஆனால், ஓரிரு நாட்களில் ஆக்கிரமிப்பு முளைத்து, வாகன நெரிசல் தொடர்கிறது.எனவே, விருத்தாசலம் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகன நெரிசலை தவிர்ப்பதுடன், பாதசாரிகள் விபத்து அபாயத்தில் இருந்து காப்பாற்றும் வகையில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ