உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிலம்பிமங்கலத்தில் துறைமுகம் வருவது... எப்போது: பணிகளை துரிதப்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு

சிலம்பிமங்கலத்தில் துறைமுகம் வருவது... எப்போது: பணிகளை துரிதப்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு

கடலுார்: சிலம்பிமங்கலம் துறைமுகத்திற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் விரைவில் ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் முகையூர், பனையூர், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த சிலம்பிமங்கலம், மயிலாடுதுறை மாவட்டம், வானகிரி, நாகை மாவட்டம் விழுந்தமாவடி, துாத்துக்குடி மாவட்டம் மனப்பாடு உள்ளிட்ட 8 இடங்களில் புதிய சிறிய துறைமுகங்கள் அமைக்க அடையாளம் காணப்பட்டுள்ளது. தொழில்துறை மூலமாக மேற்கொள்ளப்படும் உற்பத்தியை தடையின்றி கொண்டு செல்ல சிறிய துறைமுகங்கள் முதல் பெரிய துறைமுகங்கள் வரை அமைக்கும் வகையில் பல்வேறு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த துறைமுகங்களை உருவாக்க தனியார் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிறிய துறைமுகங்கள் அமைய உள்ள இடத்தில் கடல் வாணிபத்திற்கு அரபிக் கடல், வங்காள விரிகுடா, தீப கற்ப கடற்கரை நுழைவு வாயிலாக உள்ளது. கடற்கரையோரத்தில் போதிய ஆழம், முழு கடற்கரையோரத்திலும் நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே இணைப்பு பாதைகள் உள்ளது. துறைமுகம் அடிப்படையிலான வசதிகள் தேவைப்படும் கடலோரப் பகுதிகளில் கணிசமான முதலீடுகளைச் செய்யும் தனியார் அல்லது பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு, துறைமுகங்கள் அல்லது படகுத்துறை கட்டுமானத்திற்கான இடங்கள், வணிக ரீதியாக ஒதுக்கப்படும். சிலம்பிமங்கலம் கப்பல் கட்டும் தளம் 4.5 கி.மீ கடற்கரையையும், 159.27 ஏக்கர் கடற்கரை நிலத்தையும் கொண்டுள்ளது. இது தமிழ்நாட்டின் மத்திய, கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளுடன் பரந்த உள்நாட்டை உள்ளடக்கியது. சிலம்பிமங்கலம் கடல் முனையில் தற்போதயை வசதிகளை பொறுத்தவரை, கடலின் அந்தப் பகுதி கரையிலிருந்து 1 கி.மீ., தொலைவில் 10 மீ., இயற்கையான ஆழத்தைக் கொண்டுள்ளது. கடல் படுகை நன்றாக மணல் கொண்டிருக்கும். அதே வேளையில், அதன் இருப்பு நிலம் நங்கூரமிடுவதற்கு நல்லது. இந்தப் பகுதி இந்திய அரசாங்கத்தால் பெட்ரோலியம், ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் முதலீட்டு மண்டலம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்போடு நிற்கும் இத்திட்டம் அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்த வேண்டும். இப்பகுதியில் இருந்து சிமெண்ட், ரசாயன பொருட்கள், நிலக்கரி போன்ற பொருட்கள் இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளது. எனவே கடல்சார் வாரியம் சிலம்பிமங்கலம் துறைமுகம் துவங்க அடிப்படை கட்டமைப்பு வசதிகளை விரைந்து துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலமாக அப்பகுதி மக்களுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை