மனைவி தற்கொலை வழக்கு; கணவருக்கு 7 ஆண்டு சிறை
கடலுார்; வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவருக்கு 7ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கடலுார் மகளிர் கோர்ட் உத்தரவிட்டது.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த காட்டுக்கூடலுாரை சேர்ந்தவர் கண்ணன் மகன் கலைச்செல்வன், 27, கூலித்தொழிலாளி. இவருக்கும், வடலுார் அடுத்த கருங்குழியை சேர்ந்த உத்தண்டி மகள் சவுந்தரி, 24, என்பவருக்கும் கடந்த 31.8.2017ல் திருமணம் நடந்தது.சவுந்தரி செவிலியராக பணிபுரிந்தார். திருமணத்தின் போது சவுந்தரிக்கு 15 சவரன் நகை, சீர்வரிசை பொருட்கள், பைக் வாங்க ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்துள்ளனர்.இந்நிலையில், வரதட்சணை கூடுதலாக கேட்டு, மனைவியை கொடுமை செய்துள்ளார். இதனால் மனமுடைந்த சவுந்தரி, 2018, பிப்., 6ம் தேதி கணவர் வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து சவுந்தரியின் தாய் சாவித்திரி அளித்த புகாரில், முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்தனர். கலைச்செல்வனை கைது செய்து, கடலுார் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.விசாரணை முடிந்த நிலையில், கலைச்செல்வனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி நீதிபதி லட்சுமி ரமேஷ் தீர்ப்பு அளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் வளர்மதி ஆஜரானார்.