கட்டப்படுமா? கூடலுார் வெள்ளாற்றின் குறுக்கே பாலம்... இரு மாவட்டத்தில் 20 கிராம மக்கள் எதிர்பார்ப்பு
திட்டக்குடி: கூடலுார் - தளவாய் கூடலுார் இடையே வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என கடலுார், அரியலுார் மாவட்டங்களைச் சேர்ந்த 20 கிராம மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். திட்டக்குடி அடுத்த கூடலுார் - தளவாய் கூடலுார் இடையே வெள்ளாற்றின் குறுக்கே உள்ள மண் சாலையை பயன்படுத்தி, கூடலுார், கொடிக்களம், இறையூர், தொளார், மேலுார், மருதத்துார், பெ.பொன்னேரி, பெண்ணாடம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கு தளவாய், செந்துறை, அரியலுார், ஜெயங்கொண்டம், அகரம் சீகூர், வேப்பூர் உட்பட பல பகுதிகளுக்கு செல்கின்றனர்.இதேப் போன்று, அரியலுார் மாவட்டங்களைச் சேர்ந்த தளவாய் கூடலுார், சன்னாசிநல்லுார், சிவராமபுரம், புது அங்கனுார், அங்கனுார், வேள்விமங்கலம், குழுமூர், செங்கமேடு, மதுராநகர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியவசிய தேவைக்கு பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம், வேப்பூர், நல்லுார் பகுதிகளுக்கு எளிதில் சென்று வருகின்றனர்.ஆண்டுதோறும் பெய்யும் பருவமழை மற்றும் கோடை காலங்களில் பெய்யும் தொடர் மழையின் போது தொழுதுார் அணைக்கட்டு, பெரம்பலுார் மாவட்டம், சின்னாறில் இருந்து வரும் மழைநீர் வெள்ளாற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும்.அப்போது, தற்காலிக மண் சாலை அடித்து செல்லப்பட்டு, போக்குவரத்து பாதிக்கும். இதனால் இருமாவட்ட கிராம மக்களும் 15 முதல் 20 கி.மீ., துாரம் சுற்றி பெ.பொன்னேரி பாலம், திட்டக்குடி - அகரம் சீகூர் இடையே அமைக்கப்பட்ட வெள்ளாறு மேம்பாலம் வழியாக வெளியூர் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பெண்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், முதியோர்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். வெள்ளம் வடிந்ததும் இரு மாவட்ட மக்களும் சேர்ந்து ஆற்றில் மண் சாலை அமைத்து வெளியூர்களுக்கு செல்வது வழக்கம். போக்குவரத்து பாதிப்பை போக்க வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என இருமாவட்ட மக்களும் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.எனவே, மழை காலங்களில் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பைப் போக்க கூடலுார் - தளவாய் கூடலுார் இடையே வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என இருமாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.