உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் மாநகர மையத்தில் உள்ள கொண்டங்கி ஏரி பராமரிக்கப்படுமா!: சுற்றுலாத் தலமாக மாற்றினால் வருவாய் கிடைக்கும்

கடலுார் மாநகர மையத்தில் உள்ள கொண்டங்கி ஏரி பராமரிக்கப்படுமா!: சுற்றுலாத் தலமாக மாற்றினால் வருவாய் கிடைக்கும்

கடலுார்: கடலுார் அடுத்த கேப்பர் மலை அடிவாரத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கொண்டங்கி ஏரி பராமரிப்பின்றி சீர்கேடு அடைந்து வருகிறது. கடலுார் மாவட்டத்தில் 535 ஏரிகள் உள்ளன. அதில், கடலுார் மாநகரப் பகுதியில் முக்கிய நீர் ஆதாரமாக விளக்கும் வண்டிப்பாளையம் அடுத்த கேப்பர் மலை அடிவாரத்தில் கொண்டங்கி ஏரி 188 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. மூன்று பக்கமும் மலை சூழ்ந்து இயற்கையான சூழலில் அமைந்துள்ள ஏரியில் 18.72 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். மலையடிவாரத்தில் இருப்பதால் கேப்பர் மலை பகுதியில் பெய்யும் மழைநீர் ஏரியில் சங்கமிக்கும் வாய்ப்புள்ளது.100 ஆண்டுகள் பழமையான கொண்டங்கி ஏரியில், காலி இடம் வனத்துறை கட்டுப்பாட்டிலும், நீர் பிடிப்பு பகுதி மீன் வளத்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளன. மழைக் காலங்களில் ஏரி நிரம்பினால் அடுத்த 8 மாதங்களுக்கு தண்ணீர் வற்றாமல் இருக்கும். கொண்டங்கி ஏரி மூலம் மாநகரம் வளர்ச்சி அடையாத முன்பு சான்றோர்பாளையம், கடலுார் முதுநகர், சுத்துக்குளம், மணக்குப்பம், வசந்தராயன்பாளையம், புருகீஸ்பேட்டை, மணவெளி, பச்சையாங்குப்பம் கிராமங்களில் 5,000 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது.கடலுார் பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்திற்கு ஆதாரமாக உள்ளது. மண் மேடு காரணமாக ஏரி துார்ந்து போதிய பராமரிப்பின்றி உள்ளது. இதனால் ஏரியின் ஆழமும், பரப்பளவும் குறைந்து வருகிறது. இதன் மேற்கு பகுதியில் மேல் ஏரி (வெட்டு குளம்), கிழக்குப் பகுதியில் கீழ் ஏரி என இரண்டு ஏரிகள் உள்ளன. மழைக்காலங்களில் மேல் ஏரி நிரம்பி, கீழ் ஏரிக்கு தண்ணீர் வரும். இதற்காக மேல் ஏரியின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. கீழ் ஏரியில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு, வறண்டால், மேல் ஏரியின் அணை மதகை திறந்து தண்ணீர் திறந்து விடுவர். ஏரியை சுற்றி 5 இடங்களில் மதகுகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக ஏரியில் 50 ஏக்கர் பரப்பளவில் நெய்வேலி காட்டாமணி உள்ளிட்ட செடி, கொடிகள் அதிகமாக படர்ந்துள்ளன. ஏரியில் ஆக்கிரமிப்பும் அதிகமாக உள்ளது. தனி நபர்கள் சிலர், மேல் ஏரி பகுதியில் 50 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமித்து விவசாயம் செய்கின்றனர். மழைக் காலங்களில் மேல் ஏரியில் தண்ணீர் தேங்கி நின்றால் விவசாயம் செய்ய முடியாது என்பதால், அவர்கள் மேல் ஏரியில் தண்ணீரை தேக்க வைக்க விரும்புவதில்லை. கீழ் ஏரியில் உள்ள ஷட்டரும் பழுதடைந்துள்ளதால் அதன் வழியாக தண்ணீர் வடிந்து வீணாகிறது. இதனால் 8 மாதம் தேங்கி நிற்கும் தண்ணீர் மூன்றே மாதத்திற்குள் வற்றி விடுகிறது. கடலுார் நகரில் நிலத்தடிநீர் உவர்ப்பாக இருப்பதால் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தண்ணீர் எடுத்து வரப்படுகிறது.இதன் காரணமாக மின் செலவு கூடுதலாகிறது. கடலுாரில் இருந்து 70 கி.மீ., தொலைவில் கிணறு அமைத்து குடிநீர் எடுத்து வருவதற்கு பதிலாக மாநகரப் பகுதியில் உள்ள ஏரியை பராமரித்தால் அருகில் இருந்தே குடிநீரை எடுக்க முடியும். இதனால் அரசுக்கு செலவு மிச்சமாகும். எனவே கொண்டங்கி ஏரியை பராமரித்து படகு குழாம் அமைத்து, சுற்றுலாத் தலமாக மாற்றினால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். அதே போல், மதகுகளில் பழுதடைந்துள்ள ஷட்டர்களை சீரமைத்தால் ஏரியில் ஆண்டு முழுதும் தண்ணீர் வற்றாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி