உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளி நுாலகங்கள் பயன்பாட்டுக்கு வருமா? பெற்றோர்கள் எதிர்பார்ப்பு

பள்ளி நுாலகங்கள் பயன்பாட்டுக்கு வருமா? பெற்றோர்கள் எதிர்பார்ப்பு

சிதம்பரம்: பள்ளிகளில் உள்ள நுாலகங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிகளில் உள்ள நூலகங்கள் பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் மாணவர்களிடையே வாசிப்புத் திறன் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்று கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த அவல நிலை மாற வேண்டும் என்ற நோக்கத்தில் நூலகப் பயன்பாட்டுக்கு என வாரம் ஒரு பாடவேளை ஒதுக்கிப் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. அதன்படி, தொடக்க பள்ளிகளில் மதிய உணவு இடைவேளை முடிந்தவுடன் 25 நிமிடங்கள் நூலகப் பயன்பாட்டுக்காகவும், உயர்நிலைப் பள்ளிகளில் வாரம் ஒரு பாடவேளை நூலகப் பயன்பாட்டிற்கும் மற்றும் விழுமியக் கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நல்லொழுக்கம், நற்பண்புகள், அறநெறிகள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுகளை இந்த பாட வேளையின் போது மாணவர்களுக்கு கற்பிக்கப் படும் என பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து வாசிப்பு மேம்பாட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன் கூறுகையில், இதுவரை நூலக பயன்பாட்டுக்காக பாடவேளை ஒதுக்கீடு செய்யப்படாததால் மாணவர்கள் நூலகங்களை பயன்படுத்தாமல் இருந்து வந்தார்கள். ஆனால், தற்பொழுது அரசின் அறிவிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் சுழற்சி முறையில் இந்த பாட வேளைகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாணவர்கள் நூலகங்களுக்கு சென்று புத்தகங்களை வாசிப்பார்கள். இதனால் அவர்களுடைய வாசிப்புத் திறன் மேம்படும். இந்த செயல்பாடுகள் நடைமுறைப் படுத்தி மாணவர்கள் பயன் பெறுவதை மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஒரு குழு அமைத்துக் கண்காணிக்க வேண்டும். நூலகத்தில் இருந்து மாணவர்கள் புத்தகங்கள் பெற்று படிக்கும் நிலையையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி, பதிவு செய்ய வேண்டும். நூலக பயன்பாடு குறித்து கல்வித்துறை அதிகாரிகள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ