துணை முதல்வர் அறிவித்த சிந்தடிக் ஓடுதளம் அமைக்கப்படுமா?: கடலுார் விளையாட்டரங்கில் வீரர்கள் எதிர்பார்ப்பு
கடலுார்:கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் துணை முதல்வர் உதயநிதி 15 கோடி ரூபாய் மதிப்பில் சிந்தடிக் ஓடுதளம் அமைக்கப்படும் என அறிவித்து 8 மாதங்களை கடந்தும் பணி துவங்காமல் உள்ளது. கடலுார் அண்ணா விளையாட்டரங்கம் மாநகரின் மையத்தில் அமைந்துள்ளது. இங்கு, தடகளம், வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து, பாக்சிங், நீச்சல்குளம், குண்டு எறிதல், அத்லட்டிக், யோகா, உள்ளிட்ட பயிற்சிகளை பெற முடியும். பார்வையாளர்கள் கேலரியில் உட்கார்ந்து பார்ப்பதற்கு வசதியாக எதிரே அத்லெட்டிக் ஓடுதளம் உள்ளது. இந்த ஓடுதளம் பல ஆண்டுகள் ஆனதால் அதில் உள்ள கரி துகள்கள் மழையினால் கரைந்து சென்று விட்டது. தற்போது வெறும் மணல் டிராக்காக மட்டும் உள்ளது. மேலும் அண்ணா விளையாட்டரங்கில் மழைநீர் வடிய வாய்ப்பு இல்லாமல் உள்ளது. எப்போது மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி பெரிய ஏரிபோல் காட்சி அளிக்கும். இதனால் மழைநீர் வடியும் வரை வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இங்கு பயிற்சி பெற முடியாது. மேலும் மழைக்காலத்தில் சரி வர ஓட முடிவதில்லை என்று வீரர்கள் தரப்பில் புகார் வந்தது. இந்நிலையில் கருணாநிதி நுாற்றாண்டு விழாவிற்கு கடலுார் வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி, இது குறித்து விவரமாக எடுத்துக்கூறப்பட்டது. அதன்பேரில், அவர், 15 கோடி ரூபாய் மதிப்பில் அண்ணா விளையாட்டரங்கில் சிந்தடிக் ஓடுதளம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து அண்ணா விளையாட்டரங்கில் மறுநாளே அளவிடும் பணி துவங்கியது. இதற்காக ஒட்டுமொத்த மைதானத்தையும் அளவீடு செய்து, மழைநீர் தேங்காதவாறு வடிகால் அமைப்பது குறித்தும், சிந்தடிக் ஓடுதளம் அமைப்பது குறித்தும் முதற்கட்ட அறிக்கையை அதிகாரிகள் தயார் செய்து அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பினர். அன்று முதல் இன்று வரை விளையாட்டரங்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் உள்ளது. கடந்த வாரம் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டி அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர்கள் பங்கேற்று விளையாடினர். முதல்வர் கோப்பை போட்டிக்கு முன்பாக சிந்தடிக் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வாளர்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துணை முதல்வர் அறிவித்த சிந்தடிக் ஓடுதளம் அமைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. இதுவரை நிதி ஒதுக்கீடு பெறாத காரணத்தால் எப்போது கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் அத்லெடிக் வீரர்கள் காத்திருக்கின்றனர்.