உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நகைக்காக பெண் அடித்து கொலை? திட்டக்குடி அருகே துணிகரம்

நகைக்காக பெண் அடித்து கொலை? திட்டக்குடி அருகே துணிகரம்

திட்டக்குடி: திட்டக்குடி அருகே பட்டப்பகலில் நகைக்காக பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த புதுக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராமர் மனைவி செல்லம், 55; கணவர் மற்றும் இரு மகன்கள் வெளிநாட்டில் உள்ள நிலையில், செல்லம் மட்டும் தனியாக வசித்து வந்தார். நேற்று பகல் 2:00 மணியளவில் வழக்கம்போல் அதே பகுதியில் உள்ள தனது வயலுக்கு செல்லம் சென்றார். மாலை 6:30 மணியளவில் அவ்வழியே சென்ற அப்பகுதி மக்கள், முகத்தில் ரத்த காயங்களுடன் கொடூரமான முறையில் செல்லம் இறந்து கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த டி.எஸ்.பி., பார்த்திபன், இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் உடலை சோதனை செய்தபோது, பின் தலையில் ரத்த காயம் மற்றும் கழுத்தில் அறுக்கப்பட்டது போன்ற காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தது தெரிந்தது. உடலை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்ததில், செல்லம் அணிந்திருந்த 10 சவரன் மதிப்பிலான தாலி மற்றும் தோடு ஆகியவை காணாததால் நகைக்காக அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, எஸ்.பி., ஜெயக்குமார் சம்பவம் குறித்து விசாரித்தார். தொடர்ந்து, மோப்பநாய், தடய அறிவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. நகைக்காக பெண் அடித்து கொலை செய்யப்பட்ட துணிகர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி