ராமநத்தம் வெள்ளாறு பாலம் சீரமைக்கும் பணி துவக்கம்
ராமநத்தம்: தேசிய நெடுஞ்சாலையில் ராமநத்தம் வெள்ளாறு பாலத்தில் சேதமடைந்த இடங்களை சீரமைக்கும் பணி நடந்தது.சென்னை - திருச்சி, விருத்தாசலம் - ஆத்துார் சாலைகள் இணையும் இடத்தில் ராமநத்தம் உள்ளது. இதன் வழியே பல்வேறு மாவட்டங்களுக்கு போக்குவரத்து சிரமமின்றி செல்ல முடிவதால் தினசரி ஆயிரக்கணக்கில் வாகனங்கள் செல்கின்றன.சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ராமநத்தம் அருகே வெள்ளாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டது.அதில், பாலத்தின் இருபுறமும் 5 இடங்களில் சேதமடைந்ததால், அவ்வழியே செல்லும் சரக்கு மற்றும் கனரக வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இந்நிலையில், திருமாந்துறை டோல்பிளாசா நிர்வாக உத்தரவின்படி, மேம்பாலத்தில் சேதமடைந்த இடங்களை கான்கிரீட் போட்டு சீரமைக்கும் பணி நடந்தது.