புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி... துவக்கம்; விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை
கடலுார்: கடலுார் மாநகர மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிக்காக மண் பரிசோதனை செய்யும் பணி நடந்தது.கடலுார் நகர மைய பகுதியில் இயங்கி வரும் பஸ் நிலையத்தை, நகரையொட்டி, அனைத்து வசதிகளுடன் பெரிய அளவில் அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிடப்பட்டது. அதையடுத்து, கடந்த அ.தி.மு.க, ஆட்சியில், செம்மண்டபத்தில் புதிய கலெக்டர் அலுவலகம் அருகே கரும்பு ஆராய்ச்சி பண்ணைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது. அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்பட்டது.அதையடுத்து, தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஆனால், கடலுார் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால், கட்டாயம் விஸ்தாரமான பஸ் நிலையம் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அதையொட்டி, பஸ் நிலையம் தேர்வு செய்ய வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு கடலுார் கரும்பு ஆராய்ச்சி பண்ணை, பாதிரிக்குப்பம், குமாரப்பேட்டை, எம்.புதுார், ஆகிய பகுதிகளில் புதிய பஸ் நிலையம் அமைந்தால் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும் என சிபாரிசு செய்தது.அதன்படி கேப்பர் மலையில் உள்ள எம்.புதுாரில் புதிய பஸ் நிலையத்தை துவங்கலாம் என முடிவு செய்யப்பட்டது. அதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தி.மு.க., கூட்டணியில் உள்ள கம்யூ., வி.சி., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் புதிய பஸ் நிலையம் எம்.புதுாரில் துவங்குவதிற்கு எதிர்ப்பு தெரிவித்தன.அ.தி.மு.க., வும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அதன்காரணமாக எம்.புதுாரில் பஸ் நிலையம் அமைக்கும் பணியை தற்காலிகமாக ஒத்தி போட்டது. இதற்கிடையே திருப்பாதிரிப்புலியூர் பாதிரிக்குப்பம் பெருமாள் கோவில் இடத்தை 2 பகுதியை தேர்வு செய்ததாக போக்கு காட்டியது. இந்நிலையில், கடலுாருக்கு முதல்வர் ஸ்டாலின்வந்து போன பின்னர் பஸ் நிலையப்பணிகள் மீண்டும் துவங்கியது. எம்.புதுாரில் உள்ள செடி, கொடிகள் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. நேற்று காலை ஓசையின்றி எம்.புதுாரில் பஸ் நிலைய கட்டடம் கட்டுவதற்காக 25 இடங்களில் மண் பரிசோதனை பணிகள் நடந்து வருகிறது. அதைத்தொடர்ந்து விரைவில் டெண்டர் விடும் பணி துவங்கும் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள். இன்னும் ஓராண்டில் சட்டசபை பொதுத்தேர்தல் வர உள்ளது. அதற்குள் பஸ் நிலைய பணிகளை முடிக்க திட்டமிட்டு ஆயத்த பணிகள் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.