மருமகனை அடித்து கொன்றமாமனார், மாமியார் கைது
மருமகனை அடித்து கொன்றமாமனார், மாமியார் கைதுகடத்துார் :கடத்துார் அருகே, குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மருமகனை, கொன்ற மாமனார், மாமியார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம் கடத்துார் அடுத்த சில்லாரஅள்ளியை சேர்ந்தவர் பச்சையப்பன், 54, கூலித்தொழிலாளி. இவர் மனைவி கவிதா, 50. இவர்களது மகள் ரம்யா, 38. இவரது கணவர் அதே பகுதியை சேர்ந்த கட்டட மேஸ்திரி சிவசங்கரன், 45. இவர்களுக்கு, 3 மகள்கள், மகன் உள்ளனர். தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த, 8 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். மனைவி ரம்யாவை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு சிவசங்கரன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் குடிபோதையில் இருந்த சிவசங்கரன், மாமனார் பச்சையப்பனிடம் தகராறில் ஈடுபட்டு, அவர் மீது பெட்ரோலை ஊற்றினார். கோபமடைந்த பச்சையப்பன், சிவசங்கரனை கட்டையால் தாக்கி, கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின் கடத்துார் போலீசில் சரணடைந்தார்.போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்து, கொலை செய்த பச்சையப்பன், உடந்தையாக இருந்த மனைவி கவிதா, 50, ஆகியோரை கைது செய்தனர்.