போலி டாக்டர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த வேப்பிலைப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன், 28. இவர் மோளையானூரில், 2 ஆண்டுகளுக்கு மேலாக வெங்கடேஸ்வரா என்ற பெயரில் ஆங்கில மருந்துகடை வைத்திருந்தார். அதே கடையில் கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு ஊசி போட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கி சிகிச்சை அளித்துள்ளார். இது குறித்து பொதுமக்கள் முதல்வர் தனிபிரிவுக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். இதையடுத்து, தர்மபுரி மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் சாந்தி உத்தரவின் படி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் அருண், மருந்துகள் ஆய்வாளர் சக்திவேல், துணை தாசில்தார் சக்திவேல் ஆகியோர் கொண்ட, போலி மருத்துவர் ஒழிப்பு குழுவினர், மோளையானுாரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வெங்கடேசன் முறையாக மருத்துவம் படிக்காமல் போலியாக டிப்ளமோ சான்றிதழ் வைத்து ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரிய வந்தது. டாக்டர் அருண் அளித்த புகார்படி, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வெங்கடேசனை கைது செய்தனர்.