உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தென்னையில் மகசூல் பாதிப்பை தடுக்கதோட்டக்கலைத்துறை செயல்விளக்கம்

தென்னையில் மகசூல் பாதிப்பை தடுக்கதோட்டக்கலைத்துறை செயல்விளக்கம்

தென்னையில் மகசூல் பாதிப்பை தடுக்கதோட்டக்கலைத்துறை செயல்விளக்கம்அரூர்:தர்மபுரி மாவட்டத்தில், அரூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, அச்சல்வாடி, கீரைப்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லுார் பகுதியில், தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 50 சதவீதம் அளவுக்கு மகசூல் குறைந்து விட்டது. இதேநிலை நீடித்தால் தென்னை மரங்கள் அழிந்து விடும். தென்னையில் பரவும் வெள்ளை ஈ பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, ஒரு தோட்டத்தில் மருந்து தெளிக்கும்போது, வெள்ளை ஈக்கள், அடுத்த தோட்டத்துக்கு பரவி விடுகின்றன. எனவே, வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில், வெள்ளை ஈ தாக்குதலில் இருந்து காக்க, ஒட்டுண்ணி வழங்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்து செய்தி, 'காலைக்கதிர்' நாளிதழில் நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து, அரூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோமதி மற்றும் அதிகாரிகள், நேற்று அச்சல்வாடியில் தென்னையில், வெள்ளை ஈ தாக்குதல் குறித்து, ஆய்வு மேற்கொண்டதுடன், விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.தொடர்ந்து, பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் பிரிவு பேராசிரியர் செந்தில்குமார், தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து கூறியதாவது: வெள்ளை ஈக்களை அழிக்க, தென்னங்கீற்றுகளின் அடிப்பரப்பை நோக்கி, தண்ணீரை பீய்ச்சி அடிக்க வேண்டும். மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களில், இரு புறமும் விளக்கெண்ணெய் தடவி ஏக்கருக்கு, 20 வீதம் தென்னை மரத்தில், 6 அடி உயரத்தில் தொங்க விட்டும் அல்லது தண்டுப்பகுதியில் சுற்றியும் ஈக்களை கவர்ந்து அழிக்கவும். கிரைசோபெர்லா இரைவிழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு, 400 வீதம் கீற்றுகளில் இணைக்கவும். என்கார்சியா என்ற ஒட்டுண்ணியை ஏக்கருக்கு, 10 இலை துண்டுகள் வீதம், 10 மரத்திற்கு ஒரு இலைத்துண்டு என்ற எண்ணிக்கையில் கீற்றுகளில் இணைக்கவும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு வேப்பெண்ணெய், 5 மி.லி., அல்லது மீன் எண்ணெய் கரைசல், 2 மி.லி., மற்றும் ஒட்டும் திரவம் ஒரு மி.லி., என்ற அளவில் கலந்து மரங்களின் அடிக்கீற்றுகளில் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும். ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது. பரிந்துரைக்கப்பட்ட உரங்களை தொடர்ந்து பயன்படுத்தலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ