தர்மபுரியில் அமைச்சர்நிகழ்ச்சிகள் திடீர் ரத்து
தர்மபுரியில் அமைச்சர்நிகழ்ச்சிகள் திடீர் ரத்துதர்மபுரி:வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தர்மபுரியில் இன்று கலந்து கொள்வதாக இருந்த, நிகழ்ச்சிகள் அனைத்தும், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டத்திற்கு, தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பொறுப்பு அமைச்சராக உள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் அரசு சார்பில், நலத்திட்ட உதவிகள், வளர்ச்சி பணிகள் தொடக்கம் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகளையும் சேர்த்து கவனித்து வருகிறார். இந்நிலையில், தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தர்மசெல்வன், 28 நாட்கள் மட்டும் பொறுப்பு வகித்தார். அந்த, 28 நாட்களில், ஒருமுறை கூட, பொறுப்பு அமைச்சர் பன்னீர்செல்வம், தர்மபுரி மாவட்டத்திற்கு வருவதை தவிர்த்ததாக, தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று (ஏப்.10), தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில் அரசு டவுன் பஸ்கள் வழித்தட நீட்டிப்பு, தொடர்ந்து, அரூரில் அரசு தொழில்துறை பயிற்சி நிறுவன கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுதல், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பஞ்சபள்ளி மற்றும் ராஜப்பாளையம் அணைக்கட்டு புனரமைத்தல் பணிக்கான அடிக்கல் நாட்டுதல் நிகழ்ச்சிகளில், அமைச்சர் பன்னீர் செல்வம் கலந்து கொள்வதாக, நேற்று காலை தகவல் வெளியானது.ஆனால் நேற்று மாலையில், தர்மபுரி மாவட்டத்தில் அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறித்து, மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.இது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பயனாளிகள் மற்றும் கட்சியினரை குழப்பமடைய செய்துள்ளது.